சிறுகதை; "அம்மா, நான் தோத்துப் போயிட்டேன்!"

3 hours ago
ARTICLE AD BOX

-இரா. மு. மோதிரேகா

 பெங்களூர் மெட்ரோ ரயில் திட்ட வேலை நடப்பதால் அகண்ட எம்.ஜி. ரோடும் குறுகி, குக்கிராமப்பாதையைப் போலாயிற்று. வாகன ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்து உச்சவேளையில் இது ஒரு சாபக்கேடாகவே தோன்றியது. சரிதா அலுவலக அலுப்போடு என்றும் போல் இந்தத் தண்டனையை அனுபவித்து, வேலையிலிருந்து வீடு திரும்பினாள். அரை மணி நேரமாய் அம்மாவை எதிர்பார்த்து ஏமாந்த அவளது முதல் பையன் விட்டல், தன் அம்மா வீட்டில் நுழையும்போதே,

"அம்மா! இங்கே பாரும்மா! இன்னைக்குக் கோபியோட பிறந்த நாள் விழாவுல ஒரு கேம் வெச்சாங்க; எனக்குத்தான் ஃபஸ்ட் ப்ரைஸ் கிடைச்சுது."

"ஓ... தட்ஸ் நைஸ்" என்று சரிதா தன் அலுப்பைத் தூக்கி யெறிந்து அவனை அணைத்துக்கொண்டாள்.

''கோபியோட தங்கை, அனிதா தோத்துப் போயிட்டு அழுதா; ரொம்ப ஷேம் இல்லையாமா?"

"நோ... நோ... ஷேம்னு சொல்லக்கூடாது. அவங்க நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணி ஜெயிப்பாங்க. அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக்கூடாது; தெரியுமா?" என்றவள், தொடர்ந்தாள் .

"இதைவிட ஸ்கூல் பாடத்தில், அப்புறம் காலேஜுக்குப் போனா அங்கேயும் அப்பா மாதிரி எல்லாத்திலேயும் ஃபஸ்ட் வரணும் ஒ.கே.?"

"ஓகேம்மா. நாளைக்குச் சனிக்கிழமை; நாம எங்கே போறோம்?""என்னோட ஃப்ரண்டு, சுந்தரி ஆன்ட்டி தெரியுமில்ல? அவங்களோட தங்கை வசந்தி, சிங்கப்பூரிலிருந்து வந்திருக்காங்க; அவங்க வீட்டில் டின்னருக்குப் போறோம்."

"அங்க கேம்ஸ் இருக்குமா?"

"ம்ம்... உன்ன மாதிரி பசங்களும் வருவாங்க, அதனாலே அந்தச் சிங்கப்பூர் ஆன்ட்டி ஏதாவது நடத்துவாங்க. நாளைக்கும் நான் லேட்டா வருவேன். நீ சுஜாதாவோட போய் ஆடிட்டு இரு. நான் வந்துடறேன். அதுவும், நீ ஹோம் வொர்க் முடிச்சிட்டு என்கிட்டே 'ஓகே' வாங்கினாதான் அனுப்புவேன்."

பிறகு, வீட்டுப் பணிப்பெண் சுஜாதாவிடம் எல்லா விவரமும் சொல்லிவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் சரிதா.

ரிதா, பூத்துக் குலுங்கும் ஒரு குதூகலமான குடும்பத்தில் மருமகளாக வந்தவள். அவள் கணவன் சந்திரன், பெங்களூரில் எம்.பி.ஏ. படித்து நல்ல பணியில் கார், சொந்த வீடு, இரு பிள்ளைகள், பெற்றோர்களுடன் ஓ... ஹோவென்று வாழ்க்கை நடத்தி வந்தான். சரிதாவும் சந்திரனும், கல்வி, அறிவு, திறமை, அழகு, பண்பு எல்லாம் பொருந்தி, 'மேட் ஃபார் ஈச் அதர்' என்று பலராலும் பாராட்டப்பட்டனர்.

சந்திரனுக்கு அலுவலகத்தில் தலைக்குமேல் வேலை. இருந்தாலும், வார இறுதியை மனைவி மகனுக்குத் திருவிழா போல் ஜமாய்ச்சுடுவான்.

இதையும் படியுங்கள்:
அட்லாண்டிக் பெருங்கடலை தனியாக கடந்து சாதனை செய்த அனன்யா!
Short Story in Tamil

உல்லாசமான ஒரு விடுமுறையன்று மாலை, குழந்தையின் கும்மாளம் ஒருபுறம் இருக்க, மாடி அறையில், ஒரு குறையும் இல்லாது 'சிவனே' வென்று டீ.வி பார்த்துக்கொண்டிருந்தச் சந்திரனின் உயிரைச் 'சடார்' என அந்த எமன் பறித்துவிட்டான்! நாற்பது வயது நிரம்பாத இவனுக்கு என்ன ஆயிற்றோ? சந்திரன் திடீரென பாத்ரூமுக்குள் ஓடினான், விழுந்தான், மாண்டான்! யாராலும் காப்பாற்றும் வாய்ப்பே இல்லாமல் போயிற்று.

இப்போது சரிதா, தன் வாழ்க்கையைத் துணிவாக எதிர்கொள்பவளாக மாறியுள்ளாள். அவள் உள்ளத்தில் யாரும் காணாத அளவு சந்திரன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவள் அழுது தீர்ந்துவிட்டாயிற்று. "இனி யாரும் விட்டலன் முன்னே அழவே கூடாது" என வீட்டிலுள்ள எல்லாருக்கும் ஒரு அன்புக் கட்டளைப் போட்டாள். சந்திரன் இருக்கும்போது அவன் விட்டலுக்குச் செய்த வேலைகளும், கேளிக்கைகளும், எல்லாவற்றிலும் முந்தி இருக்கச் செய்த அத்தனையும் தொடர்ந்து இவள் செய்து வருகிறாள். முப்பத்திரண்டு வயது விதவை, தன் பிள்ளைக்குத் தாயாகவும் தந்தையாகவுமிருக்கிறாளே!

ன்று இரவு சரிதா ஓய்வாய் இருக்கும் நேரம், "அம்மா ஹோம் வொர்க் முடிச்சுட்டேன்; ஒகேவா பாரும்மா'' என்றான் விட்டல். சரிதாவும் ஹோம் வொர்க்கை சரிபார்த்து, "ஓகே" என்றாள்.

"...ய்ய்ய்யா... நாளைக்குப் பார்ட்டி! என்ன டிரஸ் போடணும்மா?''

''எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன்; அஞ்சு மணி வரைக்கும் தூங்கணும், ஆறு மணிக்கு சுஜாதா அக்கா கூட்டிட்டுப் போய்விடுவாங்க; கேம்ஸில் தோத்துப் போனவங்க யாரையும் ஷேம் சொல்லக்கூடாது. நான் ஏழு மணிக்குள்ளே வந்துடறேன்" என்று பெரிய 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' லிஸ்ட் போட்டாள்.

அடுத்தநாள், விட்டல் பார்ட்டி நினைவால் தூங்காது, சுஜாதாவை நச்சரித்ததால், அரை மணி நேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்தார்கள். ஆறு மணிக்கு மேல் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஜோடி ஜோடியாக பிள்ளைகளுடன் வர ஆரம்பித்தார்கள்.

ன்று சுந்தரியின் தங்கை வசந்தியின் பிறந்த நாளும்கூட. அது யாருக்கும் தெரியவில்லை. அதனால் சற்று நேரத்துக்குப் பிறகு கேக் வெட்டப்பட்டது. விட்டல்தான் கைகொட்டி உச்சக் குரலில் 'ஹேப்பி பர்த்டே' பாடினான். எல்லாருக்கும் கேக் விநியோகம் செய்தபிறகு, விளையாட்டுகள் தொடங்கின.

அடுத்தது, 'மியூசிக்கல் சேர்'. அமீர்கானின் 'சாரே ஜமீன் பர்' படத்தின் பாட்டு 'பம்பம் போலே' போட்டு ஆரம்பித்தாள். பிள்ளைகளுக்கு ஒரே குஷி. விட்டலுக்கும் அது ஃபேவரிட் ஸாங். அவ்வப்போது அந்தப் பாட்டுக்கேற்றவாறு விட்டல் குதித்து ஓடும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்தவாரே சரிதா, உள்ளே வந்து உட்கார்ந்தாள். ஆட்டத்தின் நாற்காலிகள் ஒவ்வொன்றாக குறைந்தது. கடைசி நாற்காலி இருந்தபோது விட்டலும் வசத்தியின் அஞ்சு வயசு பெண்ணும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

'ஒரு வேளை விட்டல் தோற்றுவிட்டால் அதைத் தாங்குவானோ?' என்று ஏனோ இவள் உள்ளுக்குள் பட்டாம் பூச்சி ஆடத்தொடங்கியது. மியூசிக் நின்றது. இரண்டு பிள்ளைகளும் முன்னும் பின்னும் ஓடினார்கள். ஆஹா... இந்த ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள்! ஒரே கரகோஷத்துக்கிடையே விட்டலை அந்தக் கடைசி நாற்காலியின் மேலேயே நிற்க வைத்து எல்லாரும் பலமாகக் கைகளைத் தட்டினார்கள்.

சந்தி அடுத்த ஆட்டத்துக்கு எல்லாரையும் அழைத்தாள். அந்தச் சமயம் விட்டல், அவன் அம்மாவைப் பார்த்து அவளிடம் ஓடினான்.

"அம்மா எப்ப வந்தே? மியூசிக்கல் சேர்ல நான்தான் ஃபஸ்ட்"

"நீ, முயல்குட்டி போல ஓடும்போதே வந்தேன். விட்டல் சேம்பியன் ஆச்சே; அத வேற சொல்லணுமா?"

"அம்மா, ஒன் மோர் கேம்"

"ஓகே, ஆல் த பெஸ்ட்! யாரையும் கிண்டல் செய்யாதே" என்று அனுப்பி வைத்தாள்.

வசந்தி எல்லா பிள்ளைகளையும் சேர்த்து அடுத்த ஆட்டத்தைப் பற்றி விவரித்து 'ஆன் யுவர் மார்க், கெட் செட் கோ' என்று தொடங்கினாள். எல்லாரும் காம்பௌண்ட் உள்ளே இருக்கும் தென்னை மரத்தைச் சுத்தி வந்து, வசந்தி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு ஓடி வந்தார்கள். முதலில் ஓடி வந்தது விட்டல்தான். பிறகு வசந்தியிடமிருந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு பேப்பர் சுருள் எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள். அங்கும் விட்டல்தான் முதல். பிறகு காகிதத் தாளைப் பிரித்துப் பார்த்து எல்லாரும் வராந்தாவுக்கும் வெளியிலும் நீ முந்தி நான் முந்தி என்று அங்கும் இங்கும் ஓடி இடித்து விழுந்து ஒரே அமர்க்களமாக்கினார்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்: பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்
Short Story in Tamil

வராந்தாவிலுள்ள, எல்லாருடைய செருப்பு, ஷூ இன்னும் சில பொருள்கள் எல்லாம் கலைக்கப்பட்டன. இத்தனைக்கு மிடையில், விட்டல் அமைதியாக முதலில் உள்ளே நுழைந்தான். பிறகு மூன்று பேர் விட்டலை முந்திக்கொண்டு ஓடிப்போய் வசந்தியிடம் நின்ற பிறகு ஆட்டம் நிறுத்தப்பட்டது. விட்டல், சோகம் தோய்ந்த முகத்துடன் அவன் அம்மாவிடம் சென்று,

"அம்மா நான் தோத்துப் போயிட் டேன்" என்றான்.

"போகட்டும் விடு. நான்தான் சொன்னேனே, தோத்துப் போனா ஃபீல் பண்ணக் கூடாதுன்னு; நெக்ஸ்டைம் வின் பண்ணலாம்"

"நெக்ஸ்டைம் கூட முடியாதுமா!"

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி, அருகே வந்து, சரிதாவையும் விட்டலையும் பார்த்து, "வசந்திக்கு இன்னும் விஷயம் தெரியாது" "டோன்ட் ஒர்ரி விட்டல், அடுத்த முறை இந்த விளையாட்டு இருக்காது" என்றாள்.

"இனிமே தோத்தாக்கூட ஒர்ரி பண்ணிக்கமாட்டேன் ஆன்டி; அம்மா சொல்லியிருக்காங்க" என்றான் விட்டல்.

சரிதாவுக்கு அது என்ன விளையாட்டு என்று புரியவில்லை. விட்டல் கையிலிருந்த சீட்டை வாங்கிப்பார்த்தாள். இதுவரைக்கும் ஒரு சவாலாக அடக்கி வைத்த சரிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டவிருந்தது; அதை விட்டலின் முன் சிந்த விடாமல் தடுத்தாள். மீண்டும் அந்தக் காகிதத் துண்டைப் பார்த்தாள். அவள் பார்வையில் விழுந்தது: விட்டல் சிந்திய கண்ணீர்த் துளியும் அதற்கடியிலிருந்த 'உன் அப்பாவின் ஷூவைக் கண்டுபிடி' என்ற எழுத்துகளும்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் மே 2010, இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Read Entire Article