ARTICLE AD BOX
வாழ்வில் பெரிய அளவு மாற்றங்களை எதிர்பார்ப்போர் செய்ய வேண்டியதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் மட்டுமே. அவற்றை தொடர்ந்து செய்து வரும்போது, நாளடைவில் அவை நம் வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை. வாழ்க்கையில் முன்னேற நாம் செய்ய வேண்டிய 10 விதமான சிறு சிறு விஷயங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.சேமிப்பு: நாம் செய்யும் தினசரி செலவுகளில் சில அனாவசியமாகவும் தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கலாம். உதாரணமாக, அதிக பணம் கொடுத்து ஹோட்டல் களில் சாப்பிடும் காலை உணவு மற்றும் காபியை தவிர்த்து, வீட்டில் தயாரிக்கப்படும் உணவை உட்கொள்ளலாம். இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை சிறு சேமிப்புக் கணக்கில் போட்டு வரலாம்.
2.உடல் நலத்தில் அக்கறை: நம் உடல் நலம் சிறப்பாயிருக்கும்போது மனமும் தெளிவாயிருக்கும். இதற்கு நாம் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி யோகா, ஜிம் ஒர்க்அவுட், நடைப்பயிற்சி அல்லது ஓடுதல் போன்றவற்றை செய்து வரலாம். வேலை நிமித்தம் கம்ப்யூட்டர் திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். இது நம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டும்.
3.உணவு உண்பதில் நேரம் தவறாமை: ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை தினமும் சரியான நேரத்தில் உண்பதற்கு முன்னுரிமை அளித்தல் மிக முக்கியம். வேலைப் பளுவில் ஏதாவது ஒரு வேளை உணவை தவற விடுவது பின்னாளில் உடல் நலக் குறைபாட்டை உண்டு பண்ணக் காரணியாகிவிடும். எனவே ஒரு வாரத்தில் உண்ண வேண்டிய உணவுகளை, நேரத்தை குறிப்பிட்டு பட்டியல் தயாரித்து அதைப் பின் பற்றினால் இதில் குழப்பம் உண்டாக வாய்ப்பேற்படாது.
4.சாதாரண விஷயங்களையும் ஆர்வத்துடன் கையாள்வது: சின்ன விஷயத்தையும் சவாலாக எடுத்து, 'ஏன்', 'எதற்கு' போன்ற கேள்விகளுடன் அவற்றின் உள்ளும் புறமும் முழுவதுமாக அறிந்து கொள்வதன் மூலம் அதற்கு புதுமையான விளக்கங்களுடன் தீர்வுகாண முடியும். பாரம்பரிய முறையில் சில சடங்குகளைப் பின்பற்றினாலும் கேள்விகள் கேட்பது அதை மேலும் சிறப்பான முறையில் அணுக உதவும்.
5.ஒரே இடத்தில் இருப்பதை தவிர்த்து நகர்ந்து கொண்டிருத்தல்: வழக்கமான உடற்பயிற்சி தவிர, நாள் முழுவதும் அவ்வப்போது அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருத்தல் உடலின் இரத்த ஓட்டத்தையும், நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். கை கால்களை 5 நிமிடம் நீட்டி மடக்குவதாகவோ அல்லது படிகளில் ஏறி இறங்குவதாகவோ அந்த நகர்வு இருக்கலாம்.
6.உணர்ச்சிகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுதல்: நமக்கு நெருக்கமான நண்பர்களுடனோ அல்லது உறவினருடனோ நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுதல் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இதற்காக வாரம் ஒரு முறையேனும் அவர்களை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
7.போதுமான அளவு தரமான தூக்கம் பெறுதல்: தரமான தூக்கமானது நம் உற்பத்தி திறன், மனநிலை, கூர்நோக்கு மற்றும் செயல்பாடுகளின் மதிப்பு ஆகியவற்றை உயர்த்த உதவும். எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு, அமைதியான மனநிலையோடு உறங்கச்செல்வதை வழக்கமாக்கிக் கொள்தல் அவசியம்.
8.புதுப்புது விஷயங்களைக் கற்றறிதல்: தினந்தோறும் செக்குமாடு போல் ஒரே இடத்திலிருந்து ஒரே வேலையை செய்து கொண்டிராமல் பல வழிகளில் மனதை செலுத்துவது நம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெவ்வேறு புத்தகங்களைப் படித்தல், அறிமுகம் இல்லாத புதியவர்களுடன் பேசிப் பழகுதல், புதிதாக ஒரு உணவை முயற்சித்து செய்து பார்த்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது நம் படைப்புத் திறன் மேன்மை பெறும்; அறிவு கூர்மையாகும்.
9.நம் தொடர்பு வளையத்தை பலப்படுத்துதல்: நம் உறவினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடனான தொடர்பை எப்பொழுதும் வலுவான நிலையில் வைத்துக் கொள்ளுதல் நம்மை ஊக்கப்படுத்தவும், வாழ்க்கையில் நாம் மேன்மையான வேறு நிலைக்கு செல்லவும் வழி வகுக்கும்.
10.நேர மேலாண்மை: டைம் மேனேஜ்மென்ட் என்பது ஓர் உன்னதமான கலை. இதுவே நம் வாழ்வியலை கட்டுப்படுத்தும் ஆயுதம் என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு வேலையையும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி, அதற்கு எல்லைக் கோடுகளை வகுத்து, அதற்குள் நம் வேலைக்கும் ஓய்விற்கும் நேரம் ஒதுக்கி அதை செய்து முடிக்க வேண்டும். இதற்கு ஒரு திட்ட அட்டவணை தயாரித்து அதை இம்மி பிசகாமல் பின்பற்றி வெற்றி அடையலாம்.
மேலே கூறிய பத்து வழி முறைகளை நாம் தினமும் கடைப்பிடித்து வந்தால் அது நம்மை பணத் தட்டுப்பாடின்றி வாழ்வில் பல படிகளை சுலபமாகக் கடந்து உச்சம் தொட உதவி புரியும்.