ARTICLE AD BOX

Veera Dheera sooran: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறியவர் விக்ரம். சேது படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட சீயான் என்கிற பட்டமே இவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்துகொண்டது. அதன்பின் தில், தூள், ஜெமினி, சாமி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் என்பதால் இயல்பான நடிப்பு என்பது இவருக்கு கை வந்த கலை. மேலும், கமல்ஹாசனுக்கு அடுத்து விதவிதமான கெட்டப்புகளில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டவர் இவர். உடலின் எடையை பாதியாக குறைத்து ‘ஐ’ படத்தில் அவர் காட்டிய தோற்றம் பிரம்மிக்க வைத்தது.
கடந்த சில வருடங்களாக விக்ரமுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. அந்த நிலையில்தான் வீர திர சூரன் படத்தில் நடிக்க துவங்கினார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை இயக்கிய அருண் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு பக்கா கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். புதுமுயற்சியாக 2 பாகங்கள் கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படம் முடிவடைந்து 2 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. ஒருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
இப்படத்தின் ஓடிடி உரிமை குறைவான விலைக்கு கேட்கப்பட்டதால் பட ரீலீஸ் தள்ளிப்போனதாக சொல்லப்பட்டது. ஒருவழியாக மார்ச் 27ம் தேதி படம் ரிலீஸ் என முடிவு செய்தார்கள். ஆனால், பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் மற்றும் பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு ஆகிய படங்கள் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் ஆனால் வீர தீர சூரன் படத்திற்கு சிக்கல் என்றார்கள். இதில், ஹரிஹர வீர் மல்லும் படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றுவிட்டது.
ஆனால், எம்புரான் படம் மார்ச் 27ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இந்த படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. ரெட் ஜெயண்ட் வெளியிடும் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும். எனவே, வீர தீர சூரன் நிலைமை என்னவாகும் என தெரியவில்லை. ஆனாலும், எம்புரான் மலையாள படம்தான். எனவே, அதற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்குவார்கள் என்கிற பேச்சும் அடிபடுகிறது.