ARTICLE AD BOX
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இளையராஜா. அதற்கு முன் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். மதுரையில் சகோதரர்களோடு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கம்யூனிச மாநாடுகளில் இவர்கள் கச்சேரி நடக்கும்.
மேடை கச்சேரி: அப்போதே சொந்தமாக டியூன் போட்டு பாடுவார் இளையராஜா. கேட்டால் இந்த பாடல் ஒரு புதிய திரைப்படத்தில் வருகிற என சொல்லிவிடுவராம். அதன்பின் சென்னை வந்து உதவி இசையமைப்பாளராக வேலை செய்ததோடு, ஒருபக்கம் கர்நாடக இசை, கிளாசிக் இசை என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்.
வயலின், கிடார் உள்ளிட்ட பல இசைக்கருவிகளையும் அவர் முறையாக கற்றுக்கொண்ட பின்னரே இசையமைப்பாளர் ஆவது என முடிவெடுத்தார். அவரின் முதல் படமான அன்னக்கிளி படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலாமனது. அதன்பின் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறினார்.
இசையில் விருந்து: சினிமாவில் மெல்லிசை மட்டுமே அதிகமாக இருந்த காலகட்டம் அது. ராஜாவோ நாட்டுப்புறப்பாட்டு, கர்நாடக இசை, வெஸ்டர்ன் இசை என எல்லா வகையான பாடல்களையும் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். அதனால்தான் 80களில் இளையராஜாவே நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தார்.
சிம்பொனி இசை: சினிமாவில் இசையமைத்து கொண்டிருக்கும் போதே சில ஆல்பங்களை வெளியிட்டார். அதன்பின் சிம்பொனி மீதும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக சிம்பொனி என்பது வெளிநாடுகளில் இசைக்கப்படுவது. இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிம்பொனி பரிச்சயமில்லாத இசை. ஆனால், ஹங்கேரி சென்று சிம்பொனி இசையை உருவாக்கினார் இளையராஜா. கடந்த மாதம் 26ம் தேதி சிம்பொனி நம்பர் ஒன் என்கிற பெயரில் ஒரு ஆல்பத்தை வெளியிட்டார்.
பாடல்களில் சிம்பொனி இசை: இந்நிலையில், சிம்பொனி இசை பற்றி அவரிடம் கேட்டதற்கு ‘சிம்பொனி இசை நம்முடைய ரசிகர்களுக்கு பரிச்சயமில்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கே தெரியாமல் அவர்களை நான் சிம்பொனி இசைக்கு தயார்படுத்தி இருக்கிறேன். பருவமே புதிய பாடல் பாடு... என் இனிய பொன்னிலாவே.. நினைவோ ஒரு பறவை... மடை திறந்து பாடும் நதியலை நான்... ஓ பிரியா பிரியா.. சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசையில் இருப்பது சிம்பொனிதான்’ என சொல்லியிருக்கிறார்.