ARTICLE AD BOX
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க முடியும். இல்லாவிடில் நிதி கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது என்று குற்றம்சாட்டிய முதலவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் நிதி தர முடியாது என்று சொல்ல ஒரு நொடி ஆகாது. தேன் கூட்டில் கல்லெறிந்து பார்க்காதீர்கள் என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இப்படியாக மத்திய அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில், மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ஒரு செயலை மத்திய அரசு செய்துள்ளது.
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது தனியார் சிபிஎஸ்சிபள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இனிமேல் மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் இனிமேல் அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம். மாநில அரசிடம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். இதில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுவரை தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற வேண்டும். ஆனால் புதிய நடைமுறை மூலம் தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழை பெறத் தேவையில்லை. அந்த வகையில் மாநில அரசின் உரிமை பறிக்கபப்ட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் நிதியை தராமல் பிடிவாதம் பிடிக்கும் மத்திய அரசு, இப்போது சிபிஎஸ்சி பள்ளிகள் அங்கீகாரம் பெறும் விதிகளிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.