ARTICLE AD BOX
சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் போது சொந்த பெயருக்கு பதிலாக புதிய பெயருடன் அறிமுகமாகும் பிரபலங்கள் ஏராளம். அதாவது நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன், நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்... இப்படி சினிமாவில் காலூன்ற, பெயர் மாறிய நடிகர், நடிகைள் பலர் உள்ளனர்.
அதேசமயம் சினிமா துறையில் திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல நடிகர்களும் நடிகைகளும் தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொண்டவர்களும் உள்ளனர். சிலரின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தால் பெயர் ராசி இல்லை என்று கருதி பெயரை மாற்றி விடுவார்கள். இந்த வரிசையில் தற்போது 80ஸ் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தன்னுடைய பெயரை மாற்றி விட்டதாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ‘ரவி மோகன்’ என்று மாற்றியதாக அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது கௌதம் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.
நவரச நாயகன் நடிகர் கார்த்திக் 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மட்டுமில்லாமல் காதல் மன்னனாகவும் கொடிகட்டி பறந்தார். இவர் தனது இளமை தூள்ளும் நடிப்பால் பல சூப்பர் ஹட் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமனும் பழம்பெரும் நடிகர் ஆவார். நடிகர் முத்துராமனை தொடர்ந்து கார்த்திக் சினிமா துறைக்கு வந்தது போல தனது மகன் கௌதம் கார்த்திக்கை சினிமா துறையில் கொண்டு வர விரும்பினார். கௌதம் கார்த்திக் தனது தந்தை, தாத்தாவை தொடர்ந்து 3-வது தலைமுறையில் நடிகராக உள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் மூலம் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் துளசி நாயர் நடித்திருந்தார். இவருக்கும் இதுவே முதல் படமாகும். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் படுதோல்வி அடைந்தது.
முதல் படம் தோல்வி அடைந்தாலும் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், முத்துராமலிங்கம் என அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் வந்தன. ஆனால் வெளிவந்த எந்த படமும் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகை மஞ்சுமா மோகனை காதலித்த கௌதம் கார்த்திக் கடந்த 2022-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற்று ஒரு ‘ஹிட்’ படத்தையாவது கொடுத்து, நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நடிகர் கௌதம் கார்த்திக் கடினமாக போராடி வருகிறார். இதற்கிடையே இவரது நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. சமீபத்தில் வெளியான மிஸ்டர் எக்ஸ் பட போஸ்டரில் இவரது பெயர் 'கவுதம் ராம் கார்த்திக்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நடிகர் கௌதம் கார்த்திக், தன் பெயரை 'கவுதம் ராம் கார்த்திக்' என மாற்றியது உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் தனது பெயரை மாற்றி உள்ளார். ஆனால் தனது பெயரை மாற்றியதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.