ARTICLE AD BOX

தமிழ்த்திரை உலகில் மெல்லிசை மன்னர் என அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் எம்எஸ்.விஸ்வநாதன். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களது பாடல்கள் எல்லாமே மெகா ஹிட் அடித்தது என்றால் அதற்கு இவரது பிரதான இசையே காரணம்.
இவரது இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் போல பிரகாசிக்கும். இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான் இவரது ஆளுமை சற்றே குறைந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் இவருக்குக் கிடைத்தது. அப்புறம் எப்படி இசை அமைப்பாளர் ஆனார்னு பார்க்கலாமா…
சின்ன வயதில் எம்எஸ்.விஸ்வநாதன் நீலகண்ட பாகவதரிடம்தான் பாட்டுப் பாடிப் பயிற்சி பெற்றார். இந்தப் பாகவதர் நாடகங்களும் எழுதுவார். அவர் ஒருமுறை அரிச்சந்திரா நாடகத்தை நடத்தியபோது அதில் லோகிதாஸாக நடிக்கக்கூடிய வாய்ப்பை எம்எஸ்விக்கு வழங்கினார். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த கலெக்டர் இதுல லோகிதாஸாக நடித்தவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
அவர் சினிமாவுக்குப் போனா நல்ல எதிர்காலம் அவருக்கு இருக்குன்னு பாராட்டினாராம். அன்றுமுதல் எம்எஸ்வி.க்கு சினிமா பைத்தியம் பிடித்து விட்டது. எப்படியாவது சினிமாவில் போய் நடிகர் ஆகி விட வேண்டும் என்று முடிவு எடுத்தாராம். அவரது மாமாவுக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்சில் பணியாற்றிய ஒருசிலரை நன்றாகத் தெரியுமாம்.

msv
அவர்தான் எம்எஸ்வி.யைக் கொண்டு போய் ஜூபிடர் பிக்சர்ஸில் சேர்த்தாராம். அங்கு நடந்த கண்ணகி படத்தில் சின்ன வேடம் கிடைத்தது. அங்கு இருந்தபோதுதான் நடிகர் டி.எஸ்.பாலையாவுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவரோ தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து வந்தார். எம்எஸ்வி.க்கும் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.
அவருக்குத் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வரவே நாடகக் கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவர் மட்டும் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தால் எம்எஸ்வி. இசை அமைப்பாளர் ஆகவே மாறி இருக்க மாட்டார் என்பதுதான் உண்மை. அவர் தொடர்ந்து நாடகங்கள் நடத்தாம இருந்ததால் எம்எஸ்.வி. மீண்டும் ஜூபிடர் பிக்சர்ஸ்க்கே வந்தார்.
அங்கு அவரது குருநாதரான எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்புதான் எம்எஸ்வி.யை பிரபல இசை அமைப்பாளராக மாற்றியது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.