ARTICLE AD BOX
சென்னை: ஸ்ரீகணபதி பிலிம்ஸ் சார்பில் மை இண்டியா மாணிக்கம் தயாரித்துள்ள படம், ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’. இதை ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ ஆகிய வெள்ளிவிழா படங்களை இயக்கியிருந்த கே.ரங்கராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். டி.தாமோதரன் ஒளிப்பதிவு செய்ய, பிஎன்சி கிருஷ்ணா வசனம் எழுதியுள்ளார். ஆர்.கே.சுந்தர் இசையில் காதல்மதி பாடல்கள் எழுதியுள்ளார். காந்த், பூஜிதா பொன்னாடா, பரதன், நிமி இமானுவேல், பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, மை இண்டியா மாணிக்கம், டெல்லி கணேஷ், சச்சு, நளினி, ‘பருத்திவீரன்’ சுஜாதா, சிங்கம்புலி, ரமேஷ்கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா நடித்துள்ளனர்.
வரும் மார்ச் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் காந்த் பேசியதாவது: நான் சினிமாவில் நடிக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வளவு நாட்களும் என்னை வாழ்த்திய, விமர்சித்த, திட்டிய, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. கடைசிவரை சினிமாவில் மட்டுமே இருப்பேன். ரசிகர்களும் நான் நல்ல படத்தில் நடித்தால், என்னைக் கொண்டாட தயாராக இருக்கின்றனர். எனவே, தொடர்ந்து நான் நல்ல படங்களில் நடிப்பேன். சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நிறைய சினிமா ஸ்டுடியோக்கள் இருந்தன.
மற்ற மொழிப் படவுலகினரும் சென்னைக்கு வந்து படப்பிடிப்பு நடத்தி சினிமா பற்றி கற்றுக்கொண்டனர். இப்போது ஐதராபாத்தில் நிறைய சினிமா ஸ்டுடியோக்கள் இருக்கின்றன. அதை நினைத்து வேதனையாக இருக்கிறது. காரணம், நம்மிடம் ஒற்றுமை இல்லை. சினிமா சங்கங்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்துவிடுகின்றனர். அது வேண்டாம். ஒற்றுமையுடன் இருந்து, மீண்டும் நமது சினிமாவை மீட்டெடுப்போம்.