ARTICLE AD BOX

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பல முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார். இந்த விழாவில் பேசிய அவர், அரசியல், சமூக நீதி, கட்சியின் எதிர்கால இலக்குகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.
திருமாவளவன் தனது உரையில், “வி.சி.க-வின் நீண்டகால இலக்கு ஆட்சியில் பங்கு பெறுவதும், அதிகாரத்தில் பங்காளியாக மாறுவதும்தான் என்று வலியுறுத்தினார். இது வெறும் தத்துவார்த்த முழக்கமல்ல, மாறாக, சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஆட்சியில் பிரதிபலிக்க வைப்பதற்காகவும் உள்ள திட்டமிட்ட இலக்கு என்று குறிப்பிட்டார். இதற்காக கட்சி தொடர்ந்து போராடும் என்று அவர் உறுதியளித்தார்.
சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய திருமாவளவன், சினிமா கவர்ச்சியின் மூலமாக இளைஞர்களை யாராலும் திசை மாற்றிவிட முடியாது, மடைமாற்றிவிட முடியாது. மேலும், “ஒரு நடிகரால் இந்த இளைஞர்களை திசை மாற்ற முடியும் என்றால், அந்த இளைஞர்கள் எனக்கு தேவையில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸை ஏற்றுக்கொண்டு என்னோடு பயணிக்கும் இளைஞர்களை எந்தக் கொம்பனாலும் திசைமாற்ற முடியாது. “நடிகர்கள் கட்சி தொடங்குவதால் வி.சி.க கரைந்துவிடாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறி, கட்சியின் அடித்தளம் வலுவாக இருப்பதாக கூறினார். இது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை மறைமுகமாக சுட்டிக்காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு தேர்தலில்கூட நிற்கவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் என எழுதுகிறார்கள். நான் நடிகராக இருந்திருந்தால், தலித் அல்லாதவராக இருந்திருந்தால் அடுத்த முதல்வர் என எழுதியிருப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதலான இடங்களை கேட்டுப்பெற முயற்சிப்போம். ஆனால் அதிக இடங்களுக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது. திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்.
இங்கு பாஜக, சங்பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்துவிட்டால் பட்டியல் சமூக மக்களின் நிலை என்னவாகும். சாதியவாதத்தை நியாயப்படுதக்கூடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் .அவர்களுடன் பாஜக கை கோர்த்தால் என்னவாகும். திருமாவளவன் ஆட்சியில் இருந்தாலும் சாதிய வன்முறையை தடுக்க முடியாது. 24 மணி நேரத்தில் சட்டம் போட்டு தடுக்க முடியாது. ஒரு குற்றவாளி பரோலில் வந்தால், அவரை கொண்டாடும் சமூகமாக உள்ளது. இது கேடான கலாச்சாரம்” இவ்வாறு பேசியிருக்கிறார்.