இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) இந்தியாவில் செயல்பட்டு வரும் பல முன்னணி உலகளாவிய விளம்பர நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தை குறிவைத்தது பல இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த சிசிஐ அமைப்பின் அதிரடி நடவடிக்கைக்கு முக்கியமான காரணமாக விலை நிர்ணயம் செய்வதில் கூட்டுசதி செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு செய்யப்படுவதால் சந்தையில் போட்டியை குறைக்க வழிவகுக்கும். இது ஆரோக்கிமான வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், இதேபோல் சிறிய நிறுவனங்களுக்கும் அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும்.

ஆதாவது ஒரு துறையில் இருக்கும் சில டாப் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துக்கொண்டு சந்தையில் சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியை முடக்கவும், சந்தை பங்கீட்டை மேம்படுத்தவும் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி மற்றும் விலையை கட்டுப்படுத்தும். இது இந்த கூட்டணியில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம், மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் மார்ச் 18ஆம் தேதி (இன்று) CCI அமைப்பு GroupM, Dentsu, Interpublic Group, பிராட்காஸ்டர் இன்டஸ்ட்ரீ குரூப்-க்கு சொந்தமான சுமார் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் இந்த நிறுவனங்கள் முன்னணி ஒளிபரப்பாளர்களுடன் இணைந்து விளம்பர கட்டணங்கள் மற்றும் தள்ளுபடிகளை கையாண்டதா என்பதை கண்டறிய நடத்தப்பட்டு உள்ளது.
இந்த சோதனைகள் மும்பை, டெல்லி மற்றும் குருகிராம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்டது. மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குரூப்எம் நிறுவனத்தின் மும்பை அலுவலகம், சிசிஐ அதிகாரிகளால் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டது.
சிசிஐ அமைப்பு இத்தகைய சோதனைகளின் முறைகேடுகளுக்கு தொடர்புடைய ஆவணங்களை பறிமுதல் செய்தல் மற்றும் நிறுவன பணியாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யும். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து உரிய நிறுவனங்கள், நிறுவன ஊழியர் மீது விசாரணை நடத்தப்படும்.
சிசிஐ டிசம்பரில் மதுபானத் துறை ஜாம்பவான்களான பெர்னோட் ரிக்கார்ட் மற்றும் அன்ஹியூசர்-புஷ் இன்பெவ் அலுவலகங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.