ARTICLE AD BOX
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த நிலையில் தொடரின் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, வங்காளதேசத்தை (ஏ பிரிவு) துபாயில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எங்களது அணியில் பல திறமையான ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். அதுமட்டும் இன்றி தற்போதைய எங்களது அணியில் அனைத்து வீரர்களும் சரி சமமான பலத்துடன் உள்ளதால் எங்களுடைய நாளில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது. நிச்சயம் நாங்கள் எதிர் அணியை பற்றி கவலைப்படாமல் எங்களது திட்டங்களை வெளிப்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்.
அதுமட்டும் இன்றி எங்களது அணியில் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மன்களை திணறடிக்க காத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி துபாயில் உள்ள ஆடுகளங்கள் எங்களது நாட்டில் உள்ள ஆடுகளம் போலவே இருக்கும் என்பதனால் நிச்சயம் எங்களது பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம்" என்று கூறினார்.