சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாக்.பயிற்சியாளர்

3 hours ago
ARTICLE AD BOX

சிட்னி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் தனது முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்த போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் துபாயில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக கோப்பையை தக்க வைக்க முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என்று இந்தியா அறிவித்து விட்டது. அதனால் இந்தியா தங்களதுப் போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. ஆனால் அங்கே தற்போது அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதனால் துபாயில் விளையாடுவது இந்திய அணிக்கு நிறைய சாதகத்தை கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஒரே மைதானத்தில் விளையாடுவதால் பிட்ச் எப்படி இருக்கும், அணியை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம் என்பது போன்ற விமர்சனங்கள் இந்தியா மீது வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துபாயில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் தான் என்றாலும் பாகிஸ்தான் தோற்பதற்கு அது காரணமில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா ஒன்றும் முன்கூட்டியே துபாய்க்கு சென்று அங்கு 10 போட்டிகளில் விளையாடவில்லை என்று அவர் விமர்சனங்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "துபாயில் இந்தியா இருப்பதற்கு காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட காரணத்திற்காக அவர்கள் துபாயில் இருக்கிறார்கள். ஒரே ஓட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவது கண்டிப்பாக சாதகம்தான். ஆனால் அதன் காரணமாக நாங்கள் தோல்வியை சந்திக்கவில்லை.

அதே போல நாங்கள் துபாய்க்கு வருவதற்கு முன் இந்தியா அந்த மைதானத்தில் தங்கி 10 போட்டிகளில் ஒன்றும் விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக எங்களால் வெல்ல முடியும் என்று நம்பினோம். ஆனால் களத்தில் விளையாடி நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால் ஏமாற்றத்தை சந்தித்தோம்.

அதனால் எங்கள் வீரர்கள் மனதளவில் காயத்தை சந்தித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்று வரும்போது நிறைய உணர்வுகள் வெளிப்படும். நீங்கள் உணர்வுகள் அடிப்படையில் காயத்தை சந்திப்பீர்கள். உண்மையில் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களை விட எங்களுடைய வீரர்கள்தான் அதிக காயத்தை சந்தித்துள்ளார்கள். நாங்கள் தடுமாறும் விஷயங்களில் முன்னேறுவது அவசியம். அதில் முன்னேற நாங்கள் முயற்சி செய்வோம்" என்று கூறினார்.


Read Entire Article