ARTICLE AD BOX

image courtesy:twitter/@ICC
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் துபாய் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா தவிர்த்து தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலியா அதிரடியான பேட்டிங்கை கொண்டிருப்பதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே சிறப்பாக விளையாடி சேசிங் செய்யும் பட்சத்தில் இந்தியா வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"இந்த பிட்ச்சில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வலுவான ஸ்பின் அட்டாக் இருப்பதாக தெரியவில்லை. அது போக ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய முக்கிய வீரர்களையும் அவர்கள் தவற விட்டுள்ளனர். அவர்களுடைய பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கிறது. எனவே இந்தியா சேசிங் செய்வது வெற்றியை பெறுவதற்கான விஷயமாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் ஆரம்பக்கட்ட ஓவர்களில் துபாய் பிட்ச்சில் நமது ஸ்பின்னர்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல அது நன்றாக மாறியது. குறிப்பாக பனி ஓய்ந்த பின் ஸ்பின்னர்களுக்கு நிறைய பிடிப்பு கிடைத்தது. ஆனால் அதற்காக துபாய் பிட்ச்சில் பேட்டிங் செய்வது அசாத்தியம் என்று அர்த்தமல்ல. கொஞ்சம் சுழல் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திய நமது ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை அசாத்தியமாக மாற்றினர்" என்று கூறினார்.