ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை ஆறு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆறு போட்டிகளின் முடிவில், எந்தெந்த வீரர்கள் அதிக ரன்கள் குவித்துள்ளனர், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்? இந்திய வீரர்கள் எத்தனை பேர்? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இதுவரை நடந்து முடிந்த ஆறு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து வீரர் டாம் லாதம் 173 ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 165 ரன்கள் எடுத்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சுப்மன் கில் இருக்கிறார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 147 ரன்கள் எடுத்துள்ளார். நான்காவது இடத்தில் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார். அவரும் இரண்டு போட்டிகளில் விளையாடி 122 ரன்கள் எடுத்துள்ளார். ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் இங்லிஸ் இருக்கிறார். அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 120 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
இவர்கள் அனைவருமே சதம் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களில் பென் டக்கெட் மற்றும் ஜோஸ் இங்லிஸ் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளனர்.
மேலும், மற்ற நாட்டினர் பாகிஸ்தான் மண்ணில் விளையாடி அதிக ரன்கள் சேர்த்து இருக்கின்றனர். அங்கு பேட்டிங் செய்வதற்கு சாதகமான பிட்சுகள் அதிக அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், துபாயில் பேட்டிங் செய்வதற்கு சவாலான பிட்சுகளில் இந்திய வீரர்களான சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சதம் அடித்து அதிக ரன்கள் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மற்ற அணி வீரர்களின் செயல்பாட்டையும், இந்திய அணி வீரர்கள் குவித்த ரண்களையும் நாம் சமமாக ஒப்பிட முடியாது.
அடுத்து, இந்தத் தொடரில் இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் யார் என்று பார்க்கலாம். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் இங்லிஸ் 6 சிக்ஸர்களையும், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 5 சிக்ஸர்களையும், பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவுஃப் 4 சிக்ஸர்களையும் அடித்து உள்ளனர். மற்றவர்கள் மூன்று அல்லது அதற்கும் குறைவான சிக்ஸர்களை அடித்து உள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களை கடத்த திட்டம்? எச்சரிக்கை விடுத்த "இன்டெல்".. சாம்பியன்ஸ் டிராபிக்கு சிக்கல்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார் என்று பார்க்கலாம். ஒருநாள் தொடரான இதில் 100க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை 14 வீரர்கள் வைத்துள்ளனர். அவர்களில் தென்னாப்பிரிக்காவின் ஐடம் மார்கிரம் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 52 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் 144.4 என்ற ஸ்டிரைக் ரேட்டை வைத்து இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் இங்லிஸ் 139.53 என்ற ஸ்டிரைக் ரேட்டை வைத்து இருக்கிறார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 122.38 என்ற ஸ்டிரைக் ரேட்டுடனும், நான்காவது இடத்தில் பாகிஸ்தானின் குஷ்தில் ஷா 121.59 என்ற ஸ்டிரைக் ரேட் உடனும், ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் ரோஹித் சர்மா 119.60 என்ற ஸ்டிரைக் ரேட் உடனும் உள்ளனர்.