ARTICLE AD BOX
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம் பரிதாபமாக தோற்று வெளியேறி விட்டன.
மறுபுறம் குருப் 'பி' பிரிவில் இங்கிலாந்து அரைஇறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டது. அந்த பிரிவில் இருந்து அரைஇறுதிக்கு முன்னேறும் 2 அணிகள் எவை என்பதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அவை அரைஇறுதிக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு காணலாம்..!
ஆப்கானிஸ்தான்:
2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி கண்டுள்ள ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அதில் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக தோல்வியடைந்தால் லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதுதான்.
ஆஸ்திரேலியா:
2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 3 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக கை விடப்பட்டாலோ அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
மாறாக தோல்வியடைந்தால் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும். அதே வேளை ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்காவை விட முன்னிலை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தென் ஆப்பிரிக்கா:
2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 3 புள்ளிகள் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினாலோ அல்லது மழை காரணமாக கை விடப்பட்டாலோ அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
தோல்வியடைந்தாலும், ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா தானாக அரைஇறுதிக்கு தகுதி பெற்று விடும்.