ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது.
நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், வில் யங் 15 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரச்சின் ரவீந்திராவுடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டினை முதல் பந்திலேயே வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.
ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், கேன் வில்லியம்சனை 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் குல்தீப் யாதவ்.
அதன் பின், டாம் லாதம் 14 ரன்களில் ஆட்டமிழக்க டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தியது. இந்த பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி உடைத்தார். கிளன் பிலிப்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தையை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் அரைசதம் கடந்தார். அவர் 101 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அசத்தினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய விராட் கோலி வந்த வேகத்தில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், அக்ஷர் படேல் 29 ரன்களிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
இதனையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. இருப்பினும், ஹார்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 49 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணி 3ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
கே.எல்.ராகுல் 34 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, இந்திய அணி கடந்த 2002 ஆம் ஆண்டு (இலங்கை அணியுடன் இணைந்து) மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.