சாதனைகள் எனக்கு முக்கியமில்லை - விராட் கோலி

5 hours ago
ARTICLE AD BOX

image courtesy:twitter/@BCCI

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 73 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது நங்கூரமாக நின்று அரைசதம் அடித்த விராட் கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்து அளித்த பேட்டியில் விராட் கோலி பேசியது பின்வருமாறு:- "அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் வெற்றி என்பது அழுத்தத்தை பொறுத்தது. அதில் விக்கெட்டுகளை கையில் வைத்துக் கொண்டு ஆழமாக நீங்கள் பேட்டிங் செய்யும்போது எதிரணி உங்களுக்கு வாய்ப்பை வழங்குவார்கள். அப்போது வெற்றி எளிதாகும். போட்டி நடைபெறும்போது உங்களுடைய தூண்டுதல்களை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும் எவ்வளவு ரன்கள் ஓவர்கள் மீதும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.

அந்த சூழ்நிலைகளில் வெற்றிக்கான இடைவெளி 25 - 30 ரன்கள் அல்லது ஓவருக்கு 6 ரன்கள் தேவைப்பட்டால் கூட கையில் 6 - 7 விக்கெட்டுகளை வைத்திருந்தால் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். சாதனைகள் என்பது எனக்கு முக்கியமல்ல. அது நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்று. சாதனைகளை நீங்கள் பார்க்காதபோது அது வெற்றியுடன் சேர்ந்து வரும். என்னைப் பொறுத்த வரை அனைத்தையும் பெருமையுடன் எடுத்துக் கொண்டு எனது அணிக்காக வேலை செய்ய வேண்டும்.

அதில் சதத்தை அடித்தால் சிறந்தது. இல்லையென்றால் உங்களுடைய ஆட்டம் அணியை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் மீண்டும் சிறப்பாக விளையாட கடினமாக உழைக்க வேண்டும். இதையே என்னுடைய கெரியர் முழுவதும் செய்து வருகிறேன். எனக்கு இனிமேலும் சாதனைகள் முக்கியமல்ல. களத்திற்கு சென்று எனது அணிக்கான வேலையை செய்வதே முக்கியம்" என்று கூறினார்.


Read Entire Article