ARTICLE AD BOX
சாட் ஜிபிடிக்கு போட்டியாக ஏஐ செயலியை உருவாக்கும் Mira Murati.. இவர் யார் தெரியுமா..?
சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பாக சாட் ஜிபிடிக்கு பிறகு ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது.
பெரும்பாலான மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்த பெருமை சாட் ஜிபிடி நிறுவனத்தையே சாரும். இதனை அடுத்து கூகுள் நிறுவனத்தின் ஜெமினி அறிமுகம் செய்யப்பட்டது.

அண்மையில் கூட சீனா தங்களுடைய செயற்கை நுண்ணறிவு செயலியான டீப் சீக்கை அறிமுகம் செய்தது. சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு செயற்கை நுண்ணறிவு செயலிகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தது ஓபன் ஏஐ நிறுவனம் தான்.
இந்த நிறுவனத்தில் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த மீரா முராட்டி புதிதாக ஒரு செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் ஆப்பை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு திங்கிங் மெஷின் லேப் (Thinking Machines lab) என அவர் பெயர் சூட்டி உள்ளார் .இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ள மீரா முராட்டி தன்னுடைய நிறுவனத்திற்கு ஆட்களை வேலைக்கு எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார் .
சாட் ஜிபிடிக்கு போட்டியாக திங்கிங் மெஷின் லேப் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர் தான் சொந்தமாக நிறுவனத்தை தொடங்க இருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் தான் தன்னுடைய நிறுவனத்தின் பெயரையும் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்வது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
சாட் ஜிபிடி, மெடா, கேரக்டர் ஏஐ உள்ளிட்ட முன்னணி செயற்கை நுண்ணறிவு செயலிகளில் பணியாற்றிய பலரும் தன்னுடைய நிறுவனத்தில் தற்போது பணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்களுடைய பிரத்தியேக தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தும் வகையிலான தயாரிப்பினை தனது நிறுவனம் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தங்களுடைய நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ஏஐ செயலிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்கள் எல்லாம் இதில் வேலையில் இருப்பதால் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Story written by: Devika