சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் பைனல்: யார் முதல் சாம்பியன்? இந்தியா வெ.இ. மோதல்

23 hours ago
ARTICLE AD BOX

ராய்ப்பூர்: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இன்று, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளன. முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் களம் காணும், முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) டி20 கிரிக்கெட் லீக் பிப். 22ம் தேதி நவி மும்பையில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற 6 அணிகளில் ஒரு வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, ஒரு வெற்றி கூட பெறாத இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இலங்கை, 4வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீசிடம் 2வது அரையிறுதியில் 6 ரன் வித்தியாசத்தில் தோற்று நடையை கட்டியது.

அதேபோல் 2வது இடம் பிடித்த இந்தியா, 3வது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 94 ரன் வித்தியாசத்தில் முதல் அரையிறுதியில் விரட்டியது. அதனால் இன்று ராய்பூரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் களம் காண உள்ளன. சச்சின் டென்டுல்கர் தலைமையிலான இந்திய அணியில் இர்பான் பதான், யூசப் பதான், ரெய்னா, அம்பாதி, பின்னி, வினய்குமார், யுவராஜ் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை அரையிறுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

லீக் சுற்றில் இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டம். அந்த ஆஸ்திரேலியாவையும் அரையிறுதியில் காலி செய்து பைனலில் விளையாட இருக்கிறது. அதேபோல் லீக் சுற்றில் தன்னை வென்ற இலங்கையை அரையிறுதியில் விரட்டி அடித்து இறுதி ஆட்டத்தில் களம் காண உள்ளது பிரையன் லாரா தலைமையிலான வெ.இ அணி. சிம்மன்ஸ், கிறிஸ் கெயில், டினோ பெஸ்ட், தினேஷ் ராமதின், ரவி ராம்பால், ஸ்மித் ஆகியோர் அந்த அணியில் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர்.அதனால் இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி கடுமையாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.

* ஐபிஎல்லை காண இலவச மெட்ரோ
ஐபிஎல் போட்டிகள் வரும் 22ம் தேதி துவங்குகின்றன. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து ரசிகர்கள் பயணிக்கலாம். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக மெட்ரோ சேவைகள் 90 நிமிடம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்து பேட்மின்டன் சீன வீரர் இறுதிக்கு தகுதி
ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் காலிறுதிப் போட்டியில் நேற்று சீன வீரர்கள் ஷி யுகி, லீ ஷிபெங் மோதினர். அதில், ஷி யுகி 21-9, 20-22, 21-19 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில், ஹாங்காங் வீரர் சி.லீ, பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை, 19-21, 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

The post சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் பைனல்: யார் முதல் சாம்பியன்? இந்தியா வெ.இ. மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article