ARTICLE AD BOX
சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய பல்வேறு சாம்பியன் வீரர்கள் விளையாடிவருகின்றனர்.
பரபரப்பாக நடந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டின. இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
ஃபைனலில் சச்சின் - லாரா மோதல்!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 முதல் சீசனானது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 போட்டியில் ஐந்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 6 போட்டியில் 4 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு சதத்துடன் 294 ரன்கள் குவித்து நல்ல ஃபார்முடன் லெண்டி சிம்மன்ஸ் ஜொலிக்கிறார். இந்தியாவில் கூட்டு முயற்சியாக மட்டுமே வெற்றியை பெற்றுவருகின்றனர். அதிகபட்சமாக ஒரு அரைசதத்துடன் யுவராஜ் சிங் 166 ரன்களுடன் முன்னிலையில் இருக்கிறார்.
பந்துவீச்சில் ரவி ராம்பால் 9 விக்கெட்டுகளுடனும், பவன் நெகி 8 விக்கெட்டுகளுடனும் முன்னிலை வகிக்கின்றனர்.
சச்சின் மற்றும் லாரா மோதும் இறுதிப்போட்டியானது ராய்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.