ARTICLE AD BOX
துபாய்,
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை ரோகித் சர்மா தற்போது முந்தியுள்ளார்.
276வது போட்டியில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் 222 இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரம் ரன்களை கடந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த ரோகித் சர்மா, 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.