ARTICLE AD BOX
2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தேசிய அணிக்கான டெஸ்ட் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குனேமேன் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு குனேமேன் முக்கியப் பங்கு வகித்தார், அதில் அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அவரது பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளானது. அதாவது ஐ.சி.சி. விதிப்படி, ஒரு பவுலர் பந்து வீசும்போது, முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளையக்கூடாது. இதை தாண்டினால் விதிமுறைக்கு புறம்பானது என்று அறிவிக்கப்படும். இதே பிரச்னையில் சிக்கிய குனேமேன், பிரிஸ்பேனில் உள்ள பரிசோதனை மையத்தில் தனது பந்துவீச்சில் சில மாற்றங்களைச் செய்து சோதனைக்குட்படுத்தினார். இதன் முடிவை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் அவரது பந்துவீச்சு தற்போது சரியாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்றும் ஐசிசி கூறியுள்ளது. இதையடுத்து, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தேசிய அணிகளுக்கான நிர்வாக பொது மேலாளர் பென் ஆலிவர், "இந்த விஷயம் இப்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு, இது ஒரு சவாலான காலகட்டமாக இருந்தது. இருப்பினும் அவர் தன்னை நிரூபித்துள்ளார். அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது. இப்போது அவர் தனது சர்வதேச வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.