சமையலுக்கு புதுசா? எதை எதை, எப்படி எப்படி வாங்க வேண்டும்? குழப்பமா?

3 days ago
ARTICLE AD BOX

ஒருமுறை வீட்டிற்கு வந்த பெரியவர் ஒருவர், "எந்த காய்கறிகளில் பூச்சிகள் அதிகமாக இருக்கிறதோ, அப்படி பூச்சி தாக்குதல் உள்ள காய்கறிகள் தான் நிறைய மருந்து போடாமல் விளைந்தது. ஆதலால் அது போன்ற காய்கறிகளாக பார்த்து வாங்கலாம் தப்பில்லை" என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவரின் பேரனை காய்கறி வாங்க கடைக்கு அனுப்பினார்கள். அவன், "தாத்தா சொன்னது போல் பூச்சி கத்தரிக்காய்களைத் தான் நிறைய வாங்கிக் கொண்டு வரவேண்டுமா?" என்று கேட்டான். "பூச்சியோடு சமைத்து வைத்தால் நீ சாப்பிடுவாயா? அதற்கு தகுந்தாற் போல் வாங்கிக் கொண்டு வா" என்று வீட்டில் கூறினார்கள்.

விவரம் தெரியாத நேரத்தில் முதன் முதலாக கடைக்கு போகும் பிள்ளைகள் தடுமாறுவது இயல்பு. அது போல் இன்னும் பலருக்கு அதிகம் கடைக்குச் செல்லாததால், எது எதை எப்படி வாங்க வேண்டும் என்ற அனுபவ அறிவு இல்லாமல் இருக்கலாம்.... படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

* புழுங்கல் அரிசியில் சிலவற்றுள் ஒரு வாடை வரும். முகர்ந்து பார்க்கும் பொழுதே அதன் வாடையை கண்டுபிடித்து விட முடியும். ஆதலால் வாடை இல்லாத பழைய அரிசியாகப் பார்த்து வாங்குவது நல்லது.

* பருப்பு வகைகளை வாங்கும் பொழுது ஒரே வடிவத்தில் இருக்கும் படியாக உள்ளதை பார்த்து வாங்க வேண்டும். ஒரு உளுந்து பெரியதாக ஒன்று சிறியதாக இருக்கும். அப்படி கலப்படமிருந்தால் அதை வாங்கக்கூடாது.

* அளவுக்கு அதிகமாக மணம் இருந்தால் அந்த எண்ணெய்களில் எஸென்ஸ் அதிகமாக சேர்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

* தனியாவை கையில் எடுத்தால் சொடக்கு என்று சத்தம் வரக்கூடாது. நல்ல கெட்டியாக இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

* மிளகாய் நல்ல நிறமாக ஒரே மாதிரி இருக்க வேண்டும். வெளுப்பு, கருப்பு , குட்டை , நெட்டை வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
வாட்டர் பாட்டில் மூடிகளின் நிறம் அர்த்தம் தெரியுமா?
Cooking

* சுரைக்காய் , நூக்கல், வாழைத்தண்டு போன்றவற்றில் நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். அதுதான் பிஞ்சான காய் என்று அர்த்தம்.

* மருந்து, பால் மற்றும் உணவுப் பொருட்கள் பிரட் , பிஸ்கட், தின்பண்டங்கள் வாங்கும் போது புதிதாகவும், அதன் எக்ஸ்பைரி தேதி எது வரையில் இருக்கிறது என்பவற்றை கவனமாக பார்த்தும் வாங்க வேண்டும்.

* பச்சைப் பட்டாணி வாங்கும் பொழுது பட்டாணியின் தோல் நல்ல பசுமையாக இருந்தால் உள்ளே இருக்கும் பட்டாணி பிஞ்சாக இருக்கும். அதன் தோல் முரடாகவும் ,வெளிறி பழுத்ததாகவும் இருந்தால் அது முற்றிய பட்டாணி என்று பொருள்.

* காலிஃப்ளவர், முள்ளங்கி வாங்கும் போது நிறைய இலை உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும்.

* முருங்கைக்காயை முறுக்கி பார்த்தால் வளைவதாக இருக்க வேண்டும்.

* கத்திரிக்காயின் பாவாடை கீழிறங்கி இருக்க வேண்டும். அதன் மேல் பகுதி நரம்பு போல் இருந்தால் முற்றிய கத்திரிக்காய் என்றும், மென்மையாக இருந்தால் பிஞ்சு கத்திரிக்காய் என்றும் அர்த்தம்.

* உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது வெட்டுப்படாததாகவும், பச்சை இல்லாததாகவும், முளைக்காததாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

* கேரட்டை வாங்கும்போது வெளிறி இல்லாமல், நல்ல கலராக இருப்பதை பார்த்து, எந்த இடத்திலும் வெட்டுப்படாமலும் லேசாக கூட அழுகல் நீர், இல்லாததாகவும் பார்த்து எடுக்க வேண்டும்

* ஆப்பிள் பழம் கனமாக இருந்தால்தான் நல்ல பழமாகும்.

* கோவைக்காய் விரைப்பாகவும், பாகற்காய் அழுத்தமாகவும், வெண்டைக்காய் மூக்கை உடைத்தால் உடையும்படியும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உணவில் பல்லி, பூச்சி... என்ன பயங்கரம்! உயிர் காக்கத்தானே உணவு?
Cooking

* முட்டை வாங்கி வந்ததும் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி முட்டையை மெதுவாக அதில் போடவும் .தண்ணீரின் அடியில் படுத்து விட்டால் நல்ல முட்டை. மிதந்தாலும் நின்றாலும் கெட்டுப் போனதாக பொருள்.

* மீன், கறி வகைகளில் ஈ மொய்த்தால் பழசு என்ற அர்த்தம். ஆதலால் அவற்றை வாங்கும் போது ஈ மொய்க்காததாக பார்த்து வாங்கினால் தான் அது புதுசு என்று அர்த்தம்.

* தேங்காய் வாங்கும் பொழுது அதன் மூன்று கண்களும் மிகவும் கருப்பாக இருந்தால் முற்றிய தேங்காய் என்று அர்த்தம். ஆதலால் கருப்பு இல்லாததாகப் பார்த்து வாங்க வேண்டும்.

* அலுமினிய பாத்திரங்கள் வாங்கும் போது நல்ல கனமான பாத்திரங்களாக பார்த்து வாங்க வேண்டும்.

* எவர்சில்வர் பாத்திரம் வாங்கும் போது ஒரு காந்த துண்டை அதன்மேல் ஒட்டி பார்க்கவும். ஒட்டிக் கொண்டால் அதில் இரும்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

* மண் பாத்திரங்கள் வாங்கும்பொழுது தட்டிப் பார்த்தால் நங் என்று சத்தம் கேட்க வேண்டும்.

Read Entire Article