ARTICLE AD BOX
திருவனந்தபுரம்,
சபரிமலையில் மாதபூஜை நாட்களில் இரு முடிகட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் மாத பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கோவில் நடை (புதன்கிழமை) இரவு அடைக்கப்படுகிறது. முன்னதாக இன்று தந்திரி பிரம்ம தத்தன் தலைமையில் சகஸ்ர கலச பூஜை நடைபெறும்.
இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை நாட்களில் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக, இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாத பூஜை நாட்களில் தினசரி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
இந்தநிலையில், இரு முடிகட்டு அல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் இரவு 9.30 மணி வரை மட்டுமே இவர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை முதல் அமலுக்கு வந்துள்ளது. சன்னிதானத்தில் கூடுதல் வசதிகளுடன் சாமி தரிசனம் செய்வதற்கான திட்ட பணிகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதாவது பக்தர்கள் கூட்டம் குறைவான நாட்களில் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்யவும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மேம்பாலத்தில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.