ARTICLE AD BOX
சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த பெண் உள்பட இரண்டு நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சுதேன் கோராம் (எ) ஜன்கூ மற்றும் சரிதா பொதாவி எனும் பெண் உள்பட 2 பேர் நாராயணப்பூர் மாவட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரி மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் இன்று (பிப்.24) சரணடைந்துள்ளனர்.
மாவோயிஸ்டு கொள்கைகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளினாலும் அவர்கள் பழங்குடியினரை சீரழிப்பதினாலும் அதிலிருந்து விலகி தற்போது அவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விடாமல் விரட்டிய இளைஞர்கள்! தப்பியோடிய வாகனம் விபத்துக்குள்ளானதில் இளம் பெண் பலி!
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் நிர்வாகத்தின் மீதான மக்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
இந்நிலையில், சரண்டைந்துள்ள 2 நக்சல்களையும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவித்து பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர். மேலும், அவர்களுக்கு அரசு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அமைத்துத் தரப்படும் எனவும், உதவி தொகையாக தற்போது ரூ.25,000 வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் நாராயணப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியைச் சேர்ந்த 792 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.