ARTICLE AD BOX
கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தா்மம் தொடா்பான சா்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் 2023, செப்டம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) சநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசும்போது சநாதன தா்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களோடு ஒப்பிட்டுப் பேசியதாக தாக சா்ச்சை எழுந்தது.
இந்த விவகாரத்தில், மஹாராஷ்டிரம், பிகாா், கா்நாடகம், ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு தரப்பினா் வழக்குகளைத் தொடா்ந்தனா். சில காவல் நிலையங்களிலும் புகாா்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக மாற்றி அவற்றின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்குகளில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடை தொடரும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், வழக்கு தொடரப்பட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், சநாதன விவகாரம் தொடர்பாக உதயநிதிக்கு எதிராக புதிதாக வழக்கு பதிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.