சத்தீஸ்கா்: 30 நக்ஸல்கள் சுட்டுக்கொலை: காவலா் வீரமரணம்

14 hours ago
ARTICLE AD BOX

சத்தீஸ்கா் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதில் காவலா் ஒருவா் வீரமரணமடைந்தாா். பிஜாபூா்- தண்டேவாடா மாவட்டங்களின் எல்லை அருகே உள்ள வனப்பகுதி மற்றும் கான்கா் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மாநில காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி) உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் வியாழக்கிழமை நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

அப்போது மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பிஜாபூரில் நிகழ்ந்த மோதலில் 26 நக்ஸல்களும், கான்கா் பகுதியில் 4 நக்ஸல்களும் கொல்லப்பட்டனா். பிஜாபூரில் காவலா் ஒருவா் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தாா்.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருவதாக கான்கா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இந்திர கல்யாண் தெரிவித்தாா்.

நிகழாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை சத்தீஸ்கரில் மொத்தம் 113 நக்ஸல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். இதில் பிஜாபூா், கான்கா் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் 97 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

பெட்டிச் செய்தி...

நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை தொடரும்: அமித் ஷா

புது தில்லி, மாா்ச் 20: சத்தீஸ்கரில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் மற்றுமொரு வெற்றியை பெற்றுள்ளோம். அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய பல்வேறு வாய்ப்புகளை வழங்கியும் அதை நிராகரித்த நக்ஸல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை பிரதமா் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் இல்லாத நாடாக இந்தியா மாறும்’ என குறிப்பிட்டாா்.

Read Entire Article