ARTICLE AD BOX
சண்டக்கோழி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி விஜய்... இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்!
சென்னை: கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் சண்டக்கோழி. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து விஷாலை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் மாற்றியது. இப்படத்தில் ராஜ்கிரண், மீரா ஜஸ்மீன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்ததாகவும் பின்னர் அவர் மறுத்திவிட்டதாகவும் லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜயின் கடைசி படம்: இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஜனநாயகன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், அந்தப் படம்தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண உள்ளார். இதனால், அவர் மிஸ் செய்த படங்களின் லிஸ்டும் நீண்டு கொண்டே போகிறது.

விஜய் மிஸ் செய்த படங்கள்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார். மேலும், அவர் சினிமாவை விட்டு விலக உள்ளது ரசிகர்களுக்கும் மட்டும் அல்ல தயாரிப்பாளர்களுக்கும் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில், அவர் மிஸ் செய்த படங்களின் லிஸ்டும் வெளியாகியுள்ளது. அப்படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன், தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தூள், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி ஆகிய படங்களை விஜய் மிஸ் செய்துள்ளார். ஆனால், இந்த 5 படங்களும் பிளாக்பஸ்டர் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் தோல்வி படம் : ஆனந்தம், ரன் படங்களின் மூலம் அஜித்தை வைத்து ஜி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லிங்குசாமி. அஜித் நடிப்பில் வெளியான ஜி திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. லிங்குசாமி கரியரில் பின்னோக்கி சென்ற காலமும் இதுதான். பின்னர், ஒரு ஹிட் படத்தை கொடுக்க காத்திருந்தார். அப்போது விஜயிடம் கதை சொல்லும் வாய்ப்ப கிடைத்தது. அவருக்காக எழுதப்பட்ட கதைதான் சண்டக்கோழி. ஆனால்,அப்படத்தில் விஜய் நடிக்க மறுத்ததாகவும், அதற்கான காரணத்தையும் தற்போது லிங்குசாமி தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்க மறுத்தது ஏன்?: சண்டக்கோழி ஸ்கிரிப்ட் முடிந்ததும் விஜய் சார் கிட்ட சொல்ல போனேன். முதல் பாதி கதையை கேட்டதும் போதும்னு நிறுத்திட்டார். முழுசா கேட்ருங்கண்ணா என கூறினேன். ராஜ்கிரண் மாதிரி ஒருத்தர் உள்ளே இப்படத்தில் வந்தபிறகு எனக்கு இதுல என்னண்ணா இருக்குன்னு கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன் அதுவும் நடக்கல. நம்மகிட்ட ஒருத்தர் இருக்கும்போது ஏன் வெளியில தேடணும்னு அதை விஷாலுக்கு பண்ணினேன் என லிங்குசாமி கூறியுள்ளார். சண்டக்கோழி படம் காமெடி, காதல், ஆக்சன் என பக்கா கமர்ஷியல் படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.