சட்டமன்ற ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பிய அப்பாவு!

7 hours ago
ARTICLE AD BOX

சபாநாயகர் அப்பாவுவின் தீவீர சார்பு நிலையும், அடுத்தவர்களை பேசவிடாமல் தடுக்கும் அணுகுமுறையும், ஆளும் தரப்பின் கவசமாக சபாநாயகர் பொறுப்பை பயன்படுத்துவதும் வெள்ளிடை மலையாகும்! பாராளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பிக்கள் மோடியை கடுமையாக விமர்சிப்பது சாத்தியமாகும் போது இங்கு ஏன் சாத்தியமில்லை..?

அதென்னவோ தெரியவில்லை. தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்கு  அரிதினும் அரிதாகத் தான் நல்ல நேர்மையான, நடுவு நிலையான சபாநாயகர்கள் வாய்க்கிறார்கள்.

பெரும்பாலும் ஆளும் கட்சித் தலைவரான முதலமைச்சரின் அடிவருடிகளாகவே பெரும்பாலான சபாநாயகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய சபாநாயகர் அப்பாவு ஒரு நிகழ்கால உதாரணமாகும்.

சபாநாயகர் அப்பாவு அடக்குமுறையின் நிகழ்கால உருவம்!

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும் போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணியின் வலுவான எண்ணிக்கை பலத்தால் அது தோற்கடிக்கப்பட்டது.

தற்போதெல்லாம் சட்ட சபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதால் சபாநாயகர் அப்பாவு அவர்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிய வருகின்றது.

அந்த வகையில் எதிர்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் வைத்திருந்தால் சபாநாயகர் அப்பாவு இந்த நேரம் பதவியில் நீடித்திருக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

சட்ட சபை நேரத்தை யாரை விடவும் அப்பாவு அவர்களே அதிகம் ஆக்கிரமிக்கிறார் என்றும் சொல்லலாம். எதிர்கட்சி உறுப்பினர்களாகட்டும், அல்லது கூட்டணி கட்சிகளின் தலைவர்களாகட்டும், ஏன் ஆளும் கட்சியில் உள்ள இளம் அமைச்சர்களாகட்டும் அவர்களை உள்ளது உள்ளபடி பேசவிடமாட்டார். ”அப்படி பேசக் கூடாது”, ”இப்படி சொல்லக் கூடாது” எனக் குறுக்கீடுகள் செய்வார். ஆட்சி மீது சின்ன தூசி படிவதைக் கூட அனுமதிக்க முடியாது என்ற ரேஞ்சுக்கு கடுமை காட்டுவார்.

உதாரணத்திற்கு முதல்வரோ, அமைச்சர்களோ பொய் சொல்கிறார்கள் என்றால், அதை எதிர்கட்சியினர் சொல்ல அனுமதிக்கமாட்டார். உண்மைக்கு மாறாக என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் பொய் என்பது அன் பார்லிமெண்டரி வார்த்தை என்பார். அதாவது பொய்யை தாராளமாக குற்றவுணர்வின்றி ஒருவர் பேசுவது கூட குற்றமில்லை. ஆனால், அவர் பொய் சொல்கிறார் என்ற உண்மையை நேர்படச் சொல்லிவிடலாகாது என ஆளும் தரப்பின் பாதுகாவலராகவே இயங்கி வருகிறார்.

மேலும்,  சட்டமன்ற கூட்டத் தொடர் நேரடி ஒளிபரப்பில் எதிர்கட்சியினரின் பேச்சுகளை குறைவாக காட்டுவது அல்லது இருட்டடிப்பு செய்வது என்பது இங்கு தொடர்கதையாக உள்ளது. மாறாக பாராளுமன்றத்திலோ, ராஜ்யசபாவிலோ மோடியை எவ்வளவு கடுமையாக பேசினாலும் அங்கு சபா நாயகர்கள் அனுமதிக்கிறார்கள். அவை நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் தடையில்லாத நிலை இருப்பதை பார்க்கிறோம்.

ஆனால், தமிழக சட்டமன்றத்திலோ நம்ம சபாநாயகர் அப்பாவு கூட்டணிக் கட்சிகளே கூட தங்களின் நியாயமான கோரிக்கைகளை கூற சரியாக நேரம் தர மாட்டார். ’’சுருக்கமாகச் சொல்லுங்கள். இதைத் தானே சொல்ல வருகிறீர்கள். சரி உட்காருங்கள்’’ என கறார் காட்டுவார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் அவர்களே சபாநாயகரின் அடக்குமுறைகள் பற்றி மிகுந்த வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

“திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் சட்டப்பேரவை நடந்திருக்க வேண்டும். ஆனால் 116 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. என்ற எதிர்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் கூறவில்லை. பொதுவாக ஆட்சி மீதான விமர்சனங்களை தவிர்க்கவே ஸ்டாலின் விரும்புகிறார். சட்ட மன்றக் கூட்டத் தொடர் உரிய முறையி நடந்தால் மக்கள் குறைகள் தெரிய வரும், நாம் அதை களைந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பாகிறது என்று நினைப்பது நல்லாட்சி வழங்கும் எண்ணம் இருக்கும் முதலமைச்சர்கள் கருதுவார்கள்.

அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்பதில்லை. ஒரே நாளில் 4 துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்படுகிறது..என்ற எதிர்கட்சித் தலைவரின் குற்றசாட்டும் உண்மையானதே.  ஒரு  துறை குறித்து விவாதிக்க ஒரு முழு நாள் கண்டிப்பாகத் தேவை. அதுவே போதுமானதில்லை என்றாலும் அது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும். ஆனால், ஒரே நாளில் நான்கு துறைக்கான விவாதத்தை அதிரடியாக நடத்துவது என்பது ஜனநாயக விரோத பண்பாகும்

மக்களை பாதிக்கும் சட்டங்களை கொண்டு வரும் போது கூட விவாதமின்றி அதிரடியாகவே நிறைவேற்றி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு 12 மணி நேர உழைப்பை கட்டாயப்படுத்தும் சட்டமும், விவசாயிகளை பாதிக்கும் நில எடுப்புக்கான சட்டங்களும் உதாரணங்களாகும்.

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பிரிந்து சென்றுள்ள ஒ.பி.எஸும் ஆதரித்துள்ளார். தனித்து நிற்கும் செங்கோட்டையனும் ஆதரித்துள்ளார். ஆனபோதிலும், பிரச்சினையை திசை திருப்பும் விதமாக முதல்வர் ஸ்டாலின்  அதிமுகவின் உள்கட்சி பிரச்சினையை சபையில் பேசியது நாகரீகமற்றது மட்டுமின்றி வக்கிரமானதாகும்.

இந்த சபாநாயகர் தான் 62 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிஜினல் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியை உதயகுமாருக்கு தராமல், ஒ.பி.எஸ்சுக்கு வழங்கி நீண்ட காலம் அராஜகம் செய்தார்.

எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்யும் போது, ’’போங்க,போங்க’’ என கிண்டல் செய்வது மட்டுமின்றி ஆளுநர் விவகாரத்திலும், அத்துமீறி கருத்தை பேசுவார். ஆளுநர் தவறாகவே நடந்தாலும், அதை மற்றவர்கள் விமர்சிக்க அனுமதித்துவிட்டு நடுநிலை வகிப்பது தான் சபாநாயகர் இருக்கைக்கு நியாயம் செய்வதாகும்.

இன்றைக்கு சபா நாயகர் அப்பாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கவில்லை. இது பாஜகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்றே சொல்ல வேண்டும். அதே போல பாமகவும் ஆதரிக்கவில்லை. அந்தக் கட்சியோ தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு வேண்டும் என்று அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், அதிமுகவின் ஜன நாயகத்திற்கான போராட்டத்தில் ஆதரவளிக்க மறுக்கிறது. இது பாமகவின் சந்தர்வாதத்தையே காட்டுகிறது. எதிர்காலத்தில் திமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புக்கான கதவை திறந்து வைத்திருப்பதை காட்டுவதாகவும் கொள்ளலாம்.

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தாலுமே கூட அவரைப் பற்றி அம்பலப்படுத்துவதற்கான இந்த முன்னெடுப்பு வரவேற்கதக்கதே!

சாவித்திரி கண்ணன்

Read Entire Article