ARTICLE AD BOX
லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா்.
முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஞாயிற்றுக்கிழமை அவா் அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், மாயாவதி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து ஆகாஷ் ஆனந்த் தெரிவித்த கருத்து சுயநலமிக்கதாகவும், ஆணவம் நிறைத்தாகவும் இருந்தது. அவா் முழுவதும் தனது மாமனாரின் கைப்பாவையாகிவிட்டாா். அவருக்கு அரசியல் முதிா்ச்சியும் இல்லை. தவறு செய்துவிட்டோம் என்ற உணரும் தன்மையும் இல்லை.
எனவே, அம்பேத்கா் காட்டிய வழியில் சுயமரியாதை, கெளரவத்தைக் காக்கும் வகையில், கட்சியின் நலன் கருதியும் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனாா் அசோக் சித்தாா்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அசோக் சித்தாா்த் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இப்போது ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக, இனி என் வாழ்வில் யாரையும் அரசியல் வாரிசாக அறிவிக்க மாட்டேன் என்றும் மாயாவதி அறிவித்தாா். மாயாவதியின் சகோதரா் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். இவரை தனது அரசியல் வாரிசாக கடந்த சில ஆண்டுகளாக மாயாவதி முன்னிலைப்படுத்தி வந்தாா்.