ARTICLE AD BOX
'யாகாவாராயினும் நாகாக்க' என்பதை கூறாத நாக்கு இருக்கவே முடியாது. எந்த இடத்திலும் நாவடக்கம் மிகவும் அவசியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நாக்கு எப்படி இருந்தால் சுகம் பெறலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
பொதுவாக யாருடைய நாக்கு சுத்தமாக இருக்கிறதோ அவர்களுடைய நாக்கு சிவந்து இருக்கும். நாக்கில் மாவு படர்ந்து இருந்தால் அவர்களுக்கு மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவை இருக்கிறது என்று அர்த்தம். நாக்கு மஞ்சள் கலரில் தோன்றினால் மஞ்சள் காமாலை நோய் இருப்பதற்கான அறிகுறியை அது குறிக்கும்.
சிலருடைய நாக்கு சிறிது நீல நிறமாக இருக்கும் . இது சற்று அபூர்வமான நாக்கு தான். அப்படிப்பட்ட நாக்கை உடையவர்கள் தெய்வீக அருள் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய் திறந்து என்ன சொன்னாலும் பலிக்குமாம். நாக்கு நீளமாகவும் கூர்மையான நுனி உடையதாகவும் இருந்தால் குறி சொல்லுதல், ஜோதிடம், கைரேகை, போன்ற சாஸ்திர விஷயங்களில் வல்லவராகவும் அந்நிய மொழிகளை சரளமாக பேசும் பேச்சாற்றலை உடையவர்களாகவும் விளங்குவார்கள்.
இவர்களில் சிலர் அரசாங்கத்திலும் அரசியலிலும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் புகழ்பெற்று விளங்குவார்கள் என்கிறது நாக்கு ஜோதிடம்.
நாக்கின் நுனி அகன்றும், செந்தாமரை மலர் இதழை போன்று சிவந்தும், ஸ்தூல மின்றியும், தடிமன் இன்றியும் அமைந்திருப்பவர்கள் அரசு துறையில் உயர்ந்த பதவிகளை வகிப்பார்களாம்.
நாக்கு சிவந்து குறுகி மென்மையாக இருப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அமையும். சகல சுகபோகங்களையும் இனிமையுடன் அனுபவிப்பார்கள். சமஸ்காரமாக பேசும் சாமர்த்தியமும் சாதுரியமும் வாய்க்கப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பதாக சாத்திரம் கூறுகிறது.
நாக்கு நீண்டும் மெல்லியதாகவும் மிருதுவாகவும் மென்மையானதாகவும் இருந்தால் மாந்திரீக தந்திர சாஸ்திரங்களில் வல்லவர்களாகவும், சுவையான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதில் வேட்கை உடையவர்களாகவும் விளக்குவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
சிலர் பேச்சாளராக இருப்பார்கள். சொல்லாற்றல் மிக்கவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், ஆசிரியர் சொற்பொழிவாளராகவும் இருப்பார்கள். காரணம் குட்டையாகவும், சற்று வட்ட வடிவ நுனியை உடையதாகவும் அவர்களின் நாக்கு இருக்கும். இப்படிப்பட்ட நாக்கே அவர்களுக்கு பெருமையை தேடித்தரும்.
நீளமான நாக்கை உடையவர்கள் நன்றாக வாய் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். குறும்புத்தனம் செய்பவர்களாகவும், எந்த மொழியையும் எளிதில் பேசுபவர்களாகவும், பிரசங்கிகளாகவும் திகழ்வார்கள். இசையில் வல்லவராகவும், கவிஞர்களாகவும் விளங்குபவர்கள் இத்தகைய நீளமான நாக்கை உடையவர்கள்தானாம்.
இதில் நீங்கள் எத்தகைய நாக்கை உடையவர்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் தானே.
பேச்சு தெளிவாக வருவதற்கு குழந்தை பருவத்தில் வசம்பை அளவாக கொடுப்பது அவசியம். எப்பொழுதும் பேசும் பேச்சை நிதானமாகவும், தெளிவாகவும், நிறுத்தியும், அழகாகவும், இனிமையாகவும் பேசி நற்பெயரை பெறுவோமாக!