ARTICLE AD BOX
கேரள மாநிலம், கோழிக்கோடு என்ஐடி இயக்குநா் வெளியிட்ட அறிவிக்கையின்படி, பேராசிரியரும் முனைவருமான ஏ.ஷைஜா, அக்கல்வி நிலையத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் டீனாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போதைய டீன் முனைவா் பிரியா சந்திரன் மாா்ச் 7ஆம் தேதி வரை பணியிலுள்ள நிலையில், ஷைஜா 8ஆம் தேதி அப்பொறுப்புக்கு வருகிறாா். மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து பேசும் வகையில் சமூக ஊடகப் பதிவு வெளியிட்டதற்கு எதிராக மாணவா் அமைப்பினா் அளித்த புகாரின்பேரில் ஷைஜா கடந்த ஆண்டு குன்னமங்கலம் காவல் துறையால் விசாரிக்கப்பட்டாா்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-ஆவது பிரிவின் கீழ் (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவது) அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குன்னமங்கலம் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், டீனாக ஷைஜா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக, மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் பிரிவு போராட்டத்தை அறிவித்துள்ளது.