ARTICLE AD BOX
வெயில் காலம் தொடங்கி விட்டாலே வெப்பத்தை சமாளிக்க நாம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அதில் முக்கியமான ஒன்று தான் உணவு முறை மாற்றம். நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளில் சில மாற்றத்தை கொண்டு வந்தால் உடலின் வெப்பநிலை சீராக மாறும். அதிக காரமான உணவுகளை கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உடலின் வெப்பநிலையை குறைக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகளில் ஒன்று தான் கூழ், இதில் தயிர் சேர்த்து செய்யப்படுவதால் வெயில் காலத்தில் சாப்பிட சிறப்பானதாக இருக்கும். நாம் தெருவோரக் கடைகளில் ராகி கூழ், கம்பு கூழ் போன்ற கூழ்களை வாங்கி குடித்து இருப்போம். வீட்டிலேயே நாமே சுவையான கம்பங்கூழ் செய்ய முடியும். இதனை எப்படி செய்வது என்பதை இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்
ஒரு கப் கம்பு
ஒரு பெரிய வெங்காயம்
அரை கப் தயிர்
அரை கப் சாதம்
தேவையான அளவு உப்பு
ஒரு பச்சை மிளகாய்
மேலும் படிக்க | பாரம்பரிய சிறு தானிய உணவு! கம்பு பிரியாணி செஞ்சு அசத்தலாமா?
செய்முறை
முதலில் கம்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். கம்பு நன்கு ஊறியதும் எடுத்து ஊறிய தண்ணீரை வடித்து விட்டு ஒரு மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். பின்னர் இதனை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். காலையில் ஊற வைத்து 11 மணி போல் அரைத்து வைத்தால் இரவில் கூழ் கிண்டி விடலாம். இப்பொழுது ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும். இதனை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சற்று கெட்டியான பதம் வந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.
இதை 8 மணி நேரம் வெளியில் வைத்து புளிக்க விடவும். அடுத்த நாள் காலையில் கெட்டியாக இருக்கும். கூழிலிருந்து சிறிது எடுத்து அதனுடன் வெங்காயம், தயிர், நறுக்கிய பச்சை மிளகாய், சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். கெட்டியான கூழுடன் மீன் (அ) கருவாட்டு குழம்பு சேர்த்தும் சாப்பிடலாம். கம்பினை புளிக்க வைத்தால் தான் கூழ் சுவையாக இருக்கும். இந்த கூழை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நீங்களும் இதனை உங்களது வீடுகளில் முயற்சி செய்து பார்த்து சாப்பிடுங்கள். இதே முறையில் கேழ்வரகு போன்றவற்றையும் வைத்து கூழ் செய்யலாம். வெயிலுக்கு இது சரியான உணவாகும்.

டாபிக்ஸ்