ARTICLE AD BOX
கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதுடன், வீட்டில் தூசியும் அதிக அளவில் சேர ஆரம்பித்துவிடும். வெளியில் இருந்து வரும் தூசியாக இருந்தாலும் சரி, வீட்டிற்குள்ளேயே உருவாகும் தூசியாக இருந்தாலும் சரி, இது நமக்கு பலவிதமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பாக்டீரியா, வைரஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இந்த தூசியில் இருக்கலாம். மேலும், வீட்டில் உள்ள பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என எல்லாவற்றிலும் படிந்து அவற்றை பொலிவிழக்கச் செய்யும்.
வீட்டிற்குள் ஏன் இவ்வளவு தூசு சேர்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? வெளியில் உள்ள மாசு, சமையலறையில் இருந்து வரும் புகை, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் முடி மற்றும் உதிரும் தோல், நம்முடைய தலைமுடி மற்றும் சருமத்தில் இருந்து உதிரும் நுண்ணிய துகள்கள் என எல்லாமே சேர்ந்து தான் தூசியாக மாறுகின்றன.
வீட்டிற்குள் தூசி வருவதை முழுமையாகத் தடுக்க முடியாது என்றாலும், சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் அளவை கணிசமாக குறைக்கலாம். வீட்டில் அதிகமாக பொருட்கள் இருந்தால், தூசிகள் படிவதற்கு அதிக இடங்கள் இருக்கும். எனவே, தேவையற்ற பொருட்களை அகற்றுவது நல்லது. செல்லப்பிராணிகள் இருந்தால், அவை அதிகம் முடி உதிர்க்கும் என்பதால், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். தினமும் வீட்டை சுத்தம் செய்வது, கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது, காற்று சுத்திகரிப்பான்கள் போன்றவற்றை பயன்படுத்துவது தூசியை கட்டுப்படுத்த உதவும்.
தூசி துகள்கள் மிகவும் லேசானவை. அவை எளிதில் காற்றில் கலந்துவிடும். எனவே, தரையை தினமும் பெருக்குவது, தரைவிரிப்புகள் மற்றும் சோபா உறைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது தூசியை நீக்க உதவும். Vacuum cleaner பயன்படுத்துவது தூசியை முழுமையாக அகற்ற ஒரு சிறந்த வழியாகும். இது தரையில் மட்டுமல்லாமல், சோபா, திரைச்சீலைகள் போன்ற இடங்களிலும் படிந்திருக்கும் தூசியை இழுத்துவிடும்.
ஜன்னல்கள், திரைச்சீலைகள், கதவுகள், ஜன்னல் கம்பிகள், டிவி, மின்விசிறி மற்றும் லேப்டாப் போன்ற உபகரணங்களில் தூசி எளிதில் படிந்துவிடும். இவற்றை தினமும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். ஈரமான துணியை பயன்படுத்தி துடைப்பது மிகவும் நல்லது. கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் கூட தூசி படிந்திருக்கும். மெல்லிய பிரஷ்ஷை பயன்படுத்தி அவற்றை சுத்தம் செய்யலாம்.
பொதுவாக, பகல் நேரங்களில் தூசி அதிகமாக வர வாய்ப்புள்ளது. குறிப்பாக வறண்ட காலநிலையில் காற்றுடன் தூசி எளிதில் கலந்துவிடும். எனவே, மதிய நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது நல்லது. உலர்ந்த துணியால் தூசி துடைப்பது தூசியை மீண்டும் காற்றில் பரவச் செய்யும். எனவே, ஈரமான துணியை பயன்படுத்துவது தூசியை முழுமையாக அகற்ற உதவும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கோடை காலத்தில் உங்கள் வீட்டை தூசிகள் இல்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.