ARTICLE AD BOX
நெல்லை,
நெல்லை மாவட்டம், பழவூர் அருகே விஸ்வநாதபுரம், நரிப்பாறை காலனி தெருவை சேர்ந்த ராமர் (வயது 68), கடந்த 2012ம் ஆண்டு அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முருகன்(எ) நரிப்பாறை முருகன் (வயது 45), முன்விரோதம் காரணமாக ராமரை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பழவூர் காவல் நிலையத்தில் ராமர் அளித்த புகாரின்பேரில் பழவூர் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கில் முருகன்(எ) நரிப்பாறை முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (17.03.2025) இவ்வழக்கை விசாரித்த வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷாத்பேகம் தீர்ப்பளித்தார். அப்போது, குற்றவாளி முருகனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.