ARTICLE AD BOX
சண்டையினால் கிடைப்பது என்ன? கொஞ்சம் யோசியுங்கள். ஒருவருக்கொருவர் விவாதம் செய்வதாலோ, சண்டை போடுவதாலோ என்ன கிடைக்கிறது? நீங்கள் ஒன்று சொன்னால் எதிராளி 10 சொல்வார். பேச்சு வளரும். உங்களுடைய சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே போகும். அடிதடி, கூச்சல், சண்டை எதையும் செய்யத் தயாராகிவிடுவீர்கள். சரி கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்னதான் செய்வது…
கொடூரமான விளைவுகள்
பகை உணர்வு பயங்கரமானது. இதனால் மனிதன் கொலை செய்வதுடன், தற்கொலை கூட செய்து கொள்கிறான். ஒருவருக் கொருவர் தர்க்கம், சண்டை. இதற்கெல்லாம் பிறகு எதிரில் உள்ளவனை மரணத்தின் வாயிலில் தள்ளுவது அல்லது தற்கொலை செய்து கொள்வது என்பதைப் பற்றியெல்லாம் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள்.
உறவினர்களுடன் மனக்கசப்பு
சண்டை, சச்சரவு, போட்டி இவைகள் உறவுக்குள் எப்போதும் கசப்பையும், பகையையும் சுவராக எழுப்பி விடுகிறது. கோபத்தில் நாம் ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளும் வார்த்தைகள், அன்பான செயல்களைச் சல்லடை கொண்டு சலித்து அழித்துவிடுகின்றன இம்மாதிரியான பேச்சு என்பது உறவு, நட்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்ட உறவைக்கூட பாதிக்கிறது. அலுவலகத்தில் தினமும் நடக்கும் சர்ச்சை விவாதங்களில் நல்ல எண்ணம் கிடைக்காது.
சண்டையிலிருந்து தப்புவது எப்படி?
ஓபரா ஸ்டார், ஜேன் பியர்ஸ் தன்னுடைய 50 வருட திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தைக் கூறுகையில், "நானும், என் மனைவியும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் எத்தனை கோபம் வந்தாலும், சண்டையோ, மோதலோ, வாக்குவாதமோ செய்யக்கூடாது. ஒருவர் கோபமடைந்தாலோ, கத்தினாலோ, மற்றவர் சாந்தமாக அதைக் கேட்கவேண்டும். ஏனென்றால் இருவரும் கூச்சலிட்டால், வீட்டில் அமைதியோ, நிம்மதியோ ஏற்படுவதற்கு வாய்ப்பே உருவாகாது. நீங்கள் எவ்வளவு சரியாக பேசியிருந்தாலும் அமைதி கிடைக்காது" என்றார்.
அமைதி வேண்டும்
உங்களுடைய கோபத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கோபத்தில் மனிதன் செய்யும் சில காரியங்களைப் பின்னர் யோசித்து வருந்தினாலும் ஒன்றும் கிடைக்காது. ஏதாவது பொருள் உடைந்து விட்டால், நஷ்டம் ஏற்படும். உங்களுக்குக் கோபம் ஏற்படுவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியுமா? முடியாது. அப்படியிருக்க கோபப்படுவதால் என்ன லாபம்? இதற்கு மாறாக நீங்கள் சாந்தமாக இருந்தால், உங்கள் முன்னே இருப்பவர் எத்தனை கோபப்பட்டாலும் உங்களுடைய சாந்தத்தால், நெருப்பின் மேல் தண்ணீர்போல் வேலை செய்து, மற்றவரின் கோபத்தையும் சாந்தப்படுத்திவிடும்.
அடுத்தவரின் பேச்சைப் புரிந்துகொள்ளுங்கள்
யாருடனாவது உங்களுக்கு விவாதம் ஏற்பட்டால், மற்றவர் உங்கள் விரோதியாக இருந்தாலும், அவருடைய பேச்சை முழுமையாகக் கேளுங்கள். இதனால் அடுத்தவருடைய பேச்சு சரியாகவும், உங்களுடையது தவறாகவும் இருப்பது கூட உங்களுக்குப் புரியலாம். வீணாக சண்டையில் சிக்கி தங்கள் முன்னேற்றத்தை இழக்காதீர்கள்.
பிரியும் குடும்பம்
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறிய விஷயங்களில் கூட சண்டை ஏற்பட்டு, வார்த்தைகள் வலுத்து, வீட்டில் நிம்மதியின்றி, விவாகரத்துவரை போய்விடுகிறது. கணவன் - மனைவி உறவில் ஏற்படும் கசப்பு குழந்தைகளின் ஆளுமையைப் பாதிக்கிறது. பெற்றவர்கள் சண்டை போடுவதையும், கூச்சலிடுவதையும், அடித்துக் கொள்வதையும் பார்த்து, குழந்தைகளும் அதையெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்.
இம்மாதிரி வீடுகளில் காரணமே இல்லாமல் குழந்தைகளுக்கு திட்டும், உதையும் கிடைக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் அவர்கள் கோழைகளாகவோ, முரடர்களாகவோ ஆக்கப்படுகிறார்கள்.
உடல் நலத்தில் தாக்கம்
சண்டை பகை உணர்வு, சச்சரவு இவைகள் உடல்நலத்தைப் பாதிக்கின்றன. இதயநோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் தலைகாட்ட ஆரம்பிக்கின்றன. இவைகளைத் தவிர கோபம் மூளையைக்கூட பாதிக்கிறது. ஒரு ஆராய்ச்சியின்படி கோபப்படுவது வயோதிகர்களுக்கு இதயநோய். ஹார்ட் ஃபெயிலியர் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.