ARTICLE AD BOX
Google Pay bill splitting: நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் பில்களைப் பகிர்ந்து கொள்ள இனி உங்களுக்கு தனி ஆப் தேவையில்லை. கூகுள் பே செயலியில் உள்ள பில் பிரிப்பு (Bill Split) அம்சத்தை பயன்படுத்தி பில் தொகையை சுலபமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த அம்சம் ஜிபே செயலியில் உங்கள் பில் பங்கைக் கோருவது, சேகரிப்பது அல்லது தடையின்றி பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது. சமீப காலம் வரை, இதற்கு தனியாக வேறு ஆப் தேவைப்பட்ட நிலையில் இப்போது இந்த வசதி கூகுள் பே மூலமாகவே கிடைக்கிறது.
ஆண்டிராய்டு அல்லது iOS சாதனங்கள் இரண்டிலும் GPay மூலம் பில்-ஸ்ப்ளிட்டிங் அம்சத்தை பயன்படுத்தலாம். அது எப்படி என்று இப்போது தெரிந்துகொள்வோம்.

உங்கள் மொபைலில் GPay செயலியைத் திறந்து, முகப்புத் திரையின் மேற்புறத்தில் உள்ள சர்ச் பாக்ஸை கிளிக் செய்யவும். பிறகு புதிய குழு (New Group) உருவாக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
நீங்கள் பில்லைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் அனைத்து நண்பர்களையும் இணைத்து, குழுவிற்கு ஒரு பெயர் வைக்கவும்.

ஜிபே மூலம் பல பில் ஸ்பிளிட்டிங் குழுக்களை உருவாக்கலாம். இதன் மூலம் பில்லை சமமாக, குறிப்பிட்ட சதவிகிதத்தில், குறிப்பிட்ட தொகை அல்லது பங்கு அடிப்படையில் பிரிக்க முடியும். இது பில் பிரிப்பு செயல்முறையை மிகவும் நெகிழ்வானதாக மாற்றுகிறது. குறிப்பாக, வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு தொகைகளை பங்களிக்க இந்த வசதிகள் பயன்படும்.

பில்லை எப்படிப் பிரிப்பது என்று முடிவு செய்தவுடன், குழுவில் உள்ளவர்களுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பலாம். குழுவில் உள்ள அனைவருக்கும் GPay தானாகவே பேமெண்ட் கோரிக்கையை அனுப்பும். அதைப் பெறும் உறுப்பினர்கள் தங்கள் மொபைலில் உள்ள ஜிபே மூலம் நேரடியாக தங்கள் பங்கு பணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்டதும், அது குழுவில் குறிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள பங்குகளையும் எளிதாகக் கண்காணிக்க முடியும்.