ARTICLE AD BOX
குஷ்பு, மகளோடு சென்று பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்ட சுந்தர் சி.. அடடே.. 25 வருசம் ஆச்சாம்!
திண்டுக்கல்: நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு மற்றும் தனது மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி மலை கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். மேலும் தனது 25 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கினார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி மலை கோவிலில் தனது 25 ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் விதமாக முருகனுக்கு நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

விழா பூஜைகளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டன. பின்னர் சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சுந்தர்.சி கடைசியாக 'அரண்மனை 4' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மதகதராஜா' படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. பொங்கல் ரிலீசாக வெளியான இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து சுந்தர் சி 'மூக்குத்தி அம்மன் 2' படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளார். முதல் பாகத்தினை போல் அல்லாமல் 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தனர். போலி சாமியார்களை கிண்டலடிக்கும் விதமாக வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. நயன்தாராவே மீண்டும் இப்படத்தில் அம்மனாக நடிக்கவுள்ள நிலையில், சுந்தர் சி இயக்குகிறார்.