ARTICLE AD BOX
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை கொற்றாமம் பகுதியைச் சேர்ந்தவர் அனூப். அவருடைய மனைவி சவுமியா (வயது31). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சவுமியா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாகவும், லேசான மனநல பாதிப்பும் இருந்ததால் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பல் டாக்டரான சவுமியாவுக்கு சரியான வேலை அமையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு அனூப் மற்றும் சவுமியா ஆகியோர் தூங்கச் சென்றனர். நேற்று அதிகாலையில் திடீரென படுக்கை அறையில் இருந்த சவுமியாவை காணததால், அவரது கணவர் அனூப் அவரை வீடு முழுவதும் தேடினார்.
அப்போது குளியல் அறையில் கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்து பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சவுமியா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனூப் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல் கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.