ARTICLE AD BOX
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது மகா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா. 12 முறை கழித்து நடைபெறுவது மகா கும்பமேளா. அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. அடுத்த மகா கும்பமேளா 2169 ஆம் ஆண்டு நடைபெறும்.
கும்பமேளாவின் முக்கிய அம்சமாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புராண நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது வழக்கம். ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 66 கோடி மக்கள் புனித நீராடியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமத்தில் தற்காலிக நகரமே அமைக்கப்பட்டது. சுமார் 4 ஹெக்டேர் பரப்பளவில் 25 தனித்தனி பகுதிகள், 12 படித்துறைகள், 23 சமையல் கூடங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள், 11 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.
உத்தரப் பிரதேச அரசு இதற்காக ஒதுக்கிய ரூ. 2,100 கோடி மதிப்பில் இவை அமைக்கப்பட்டாலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்பாட்டால், சில நாள்களிலேயே அவை தரமிழந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றதாகின.
அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகளைவிட, கும்பமேளாவில் தனிநபர்கள் மூலம் கிடைத்த உதவிகளும் அதனால் நடைபெற்ற வணிகமும் உள்ளூர் மக்கள் அடைந்த பொருளாதாரப் பயனும் அதிகம் என்றே கூறலாம்.
சொல்லப் போனால் கும்பமேளாவுக்காகப் புதிது புதிதாக வியாபாரங்களும் தொழில்களும் தொடங்கப்பட்டிருந்தன.
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்பது போல, திரிவேணி சங்கமத்தின் கரையில் கூடிய பலதரப்பட்ட நடுத்தர மக்களின் தேவைகளை இந்த புதிய வியாபாரங்கள் பூர்த்தி செய்தன.
வேப்பங்குச்சி
உதாரணமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலி கொடுத்த யோசனையின் பேரில் பிரயாக்ராஜ் வந்த மக்களுக்கு வேப்பங்குச்சிகளை விற்பனை செய்யத் தொடங்கியிருந்தார்.
புனித நீராட பிரயாக்ராஜ் குவியும் மக்கள், காலையில் பல் துலக்க, அதற்கான பற்பசை தேடி அலையும் அலைச்சலை இது குறைத்தது. வேப்பங் குச்சிகளை வெட்டிக் கட்டுக்கட்டாக அந்த இளைஞர் விற்பனை செய்திருந்தார். ஒரு குச்சிக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை வசூலித்தார்.
காதலி கொடுத்த யோசனையால் முதலீடே இல்லாமல் தொழில் தொடங்கியதாக சமூக வலைத்தளங்களிலும் அந்த இளைஞர் பிரபலமானார்.

செல்போன் ரீசார்ஜ்
திரிவேணி சங்கமக் கரையில் இரவு விளக்கு வெளிச்சத்துக்காக தற்காலிக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கம்பங்களில் இருந்து ஒரு மின்பலகை (எக்ஸ்டன்ஷன் போர்ட்) மூலம் மின்சாரம் எடுத்து அதன் மூலம் செல்போன் ரீசார்ஜ் செய்யும் புதிய தொழிலை ஒருவர் தொடங்கியிருந்தார்.
ஒருமுறை முழுவதும் ரீசார்ஜ் செய்துகொள்ள செல்போன்களுக்கு ஏற்ப தனிக் கட்டணத்தையும் நிர்ணயித்திருந்தார்.
எங்கு நோக்கினும் செல்ஃபிகள் என்றான பிறகு - கும்பமேளாவில் குடும்பத்துடன் வந்த பலர் குடும்ப உறுப்பினர்களைத் தொலைத்துவிடாமல் இருக்க, தொலைந்தாலும் செல்போனில் உரையாடி கண்டடைந்துகொள்ள இந்த ரீசார்ஜ் தொழில் பயன்பட்டது.

காந்தம் மூலம் காசு
உத்தரப் பிரதேசத்தின் சிறுவர்கள் பலர் பிரயாஜ்ராஜ் கூட்டத்தில், கரையோர மணற்பரப்பில் காந்தத்தை வீசிக் காசுகளை எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இது தொழில் என்ற கணக்கில் வராது என்றாலும், யாருக்கும் பாதகம் இல்லாமல் தொலைந்த சில்லறைக் காசுகளை காந்தம் கொண்டு எடுத்து அவர்கள் பலன் பெற்றனர்.
புகைப்பட நீராடல்
மகா கும்பமேளாவில் புனித நீராட நேரில் வர முடியாத பலர் தங்கள் குடும்பத்தாருக்கு விடியோ அழைப்புகள் மூலம் அந்த இடத்தை விவரித்த சம்பவங்கள் நடந்தன. நேரில் வர முடியவில்லை என அவர்கள் வருந்தினார்களோ என்னவோ? அவர்களின் இயலாமையை முதலீடாக மாற்றிக்கொண்டார் ஒருவர்.
திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தாரின் புகைப்படத்தை அனுப்பினால், அதனை நகல் எடுத்து சங்கமத்தில் நனைப்பதாகவும் அதனால்கூட புண்ணியம் கிடைக்கும் என்றும் சில வணிகங்கள் நடைபெற்றன. இதற்காக ரூ. 500 வசூலிக்கப்பட்டது. அப்படி புகைப்படத்தை ஆற்றில் மூழ்கச் செய்து எடுக்கும் விடியோக்களும் இணையத்தில் வலம் வந்தன.

புகைப்படம் புனித நீராட ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டுமா? என்று யோசித்ததாலோ என்னவோ? விடியோ அழைப்பில் இருந்த கணவரை செல்போன் வழியாகவே நீரில் மூழ்கச் செய்து எடுத்தார் பெண்மணி ஒருவர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டன.

உடைமாற்றும் கூடாரம்
புனித நீராடிய பெண்கள் பலர் உடை மாற்றுவதில் சிக்கல்களை சந்தித்தனர். அதற்கு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், கூட்ட நெரிசலுக்கு அவை போதுமானதாக இல்லை. அதோடு அவை மறுகரையின் ஓரத்தில் இருந்ததால், அனைவராலும் அந்த உடை மாற்றும் அறைகளைப் பயன்படுத்த முடியவில்லை.
அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் உடைமாற்று அறைகளை சிலர் விற்பனை செய்தனர். பயன்படுத்தி முடித்த பிறகு எளிதில் மடித்து பைகளில் வைத்துக்கொள்ளலாம். இதனை சிலர் வாடகைக்கு விட்டும் பணம் பார்த்தனர். இளம்பெண்கள் பலருக்கு இது பயனுள்ளதாக இருந்தது.

இவை இணையத்தில் வலம் வந்த, கண்ணில்பட்ட சில சுவாரசியமான தொழில்கள்தான். இதுபோன்று உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில் விற்பது, மாற்று உடை விற்பனை, விபூதி - சாந்து வைப்பது என இந்த மக்கள் கூடுகையை நம்பித் தொழில் செய்தவர்கள் ஏராளம்.
கும்பமேளாவுக்கு 40 கோடி பக்தர்கள் வருவார்கள் என்ற கணிப்பின்படி, ரூ. 2 லட்சம் கோடி வணிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியை எட்டியதால், வணிகம் ரூ. 3 லட்சம் கோடியைத் தாண்டும் என்கிறது இந்திய வணிகக் கூட்டமைப்பு.
அரசின் இந்த வசூல் விவரக் கணக்கில் மேற்கண்ட சிறு, குறு சுய தொழில் செய்து பலனடைந்தவர்கள் இருப்பார்களா? எனத் தெரியாது.
ஆனால், தங்கள் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 45 நாள்களுக்கான வணிகத்தைக் கொடுத்த கும்பமேளா அவர்கள் நினைவில் என்றும் இருக்கும் என்பது மட்டும் உறுதி.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இச்சிறு வணிகர்கள் காத்திருக்கின்றனர் இதுபோன்று மற்றொரு மக்கள் கூடும் திருவிழாவுக்காக....