ARTICLE AD BOX
அமித்ஷா வருகையை ஒட்டி கோவையில் பாஜகவினர் வைத்திருந்த பேனர்களை மாநகராட்சி அகற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பாஜகவிற்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை, இந்தியை திணிக்க பார்க்கிறது என ஆளுங்கட்சியாக திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. கொலை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் போராட்டம் நடத்தி வருகிறது பாஜக.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாநகர தலைமை அலுவலகத்தின் புதிய கட்டிடம் மற்றும் ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை கோவை வருகிறார்.
இதனையடுத்து அமித்ஷாவை வரவேற்கும் விதமாக கோவை முழுவதும் பாஜகவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பிளக்ஸ் மற்றும் கட்சி கொடிகளை கட்டியுள்ளனர், இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பீளமேடு பகுதியில் பா.ஜ.க வின் புதிய அலுவலகம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் அனுமதி இல்லாமல் வைத்து இருந்த வரவேற்பு பதாகைகளை கோவை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். அந்த பேனர்களில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை குப்பை தொட்டியில் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது .
இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க வினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவை - அவிநாசி பிரதான சாலையில் உள்ள பீளமேடு காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.