கீழடியின் சிறப்பை இன்னும் எவ்வளவு காலம் மறைப்பார்களோ?

21 hours ago
ARTICLE AD BOX

உலக அளவில் பேசப்பட வேண்டிய கீழடியின் அதிசயத்தக்க அகழாய்வுகள் ஏன் மறைக்கப்படுகின்றன…? உலகின் தலை சிறந்த, தொன்மையான பெருநகர நாகரீகத்தையும், பண்பாட்டையும்  தமிழ் சமூகம் கொண்டிருந்ததற்கான ஆய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசும், மாநில திமுக அரசும்  ஒருசேர தர மறுக்கின்றன! என்னதான் நடந்து கொண்டிருக்கிறது..?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண ஊராட்சி? ஒன்றியமாக இன்று நாம் பார்க்கும் திருப்புவனம் சங்க காலத்தில் ஒரு பெரு நகரமாக இருந்திருக்கிறது என்பதற்கான பட்டவர்த்தனமான பல அடையாளங்கள் கீழடி அகழாய்வில் தெரிகின்றன. அதாவது இந்தியாவின் தொல்லியல் ஆய்வில் சிந்து சமவெளி நாகரீகம் மொகஞ்சதாரோ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கீழடி உள்ளது!

அதற்கு இரண்டு காரணங்கள்; இதில் கண்டெடுக்கப்படும் அரிய அகழாய்வுப் பொருட்கள் இதன் காலகட்டம் கி.மு.ஒன்றாம் நூற்றாண்டு தொடங்கி, கி.மு ஆறாம் நூற்றாண்டு வரை என்பதும், ஒரு பெரு நகர தோற்றத்திற்கான வீட்டின் அமைப்புகள்  நுட்பமான கலை வேலைப்பாடுள்ள தங்கம், செம்பு மற்றும் தந்தத்திலான பல பொருட்கள்,  நீண்ட தொலைவுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் சுடுமண் குழாய்கள், தொழிற்சாலைகள் இருந்திருப்பதற்கான அடையாளமாக காணப்படும் உலைகள் போன்றவையாகும்.

உண்மையில் தேசிய அளவிலும், உலக அளவிலும் முக்கியத்துவம் பெறும் அகழாய்வாக நடத்தப்பட வேண்டிய இந்த அகழாய்வுகள் கவனம் பெறாத வகையில் இருப்பது கவலையளிக்கிறது.

பொதுவாக இது போன்ற அரிய அகழாய்வுக்கான அரிய வரலாற்றுத் தடயங்கள் பிரிட்டிஷார் காலத்தில் வெளிப்பட்டு இருந்தால் இன்று  உலக அரங்கில் தமிழர்களின் பெருமைமிகு தொல்லியல் வரலாற்றை சொல்ல அவர்களுக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. அத்துடன் ஆய்வுகளை மிகவும் வேகமாகவும், முறையாகவும் முன்னெடுத்து சரியான முறையில் ஆவணப்படுத்தி இருப்பார்கள்!

ஆனால், இவ்வளவு முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு ஆய்வை எவ்வளவுக்கு எவ்வளவு தொய்வாகவும், அலட்சியத்துடனும் செய்யலாம் என்பதற்கு கீழடியை விட வேறு சாட்சி இருக்க முடியாது.

முதன்முதலாக கீழடியில் ஒரு நகரம் புதைந்துள்ளது என்பதை கண்டறிந்தவர் அந்த ஊர் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் வை.பாலசுந்தரமே!  அந்தப் பள்ளி மாணவன் வீட்டிற்காக கிணறு தோண்டும் போது அரிய பொருட்கள் கிடைப்பது தெரிய வந்ததை அடுத்து அங்கு சென்று கிடைத்த ஆதிகாலத்து செங்கற்களையும், மண்டை ஓடு மற்றும் அரிய கலை பொருள்களை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடமும், வரலாற்று ஆய்வாளர்களிடம் சொன்னவர் ஒரு எளிய பள்ளிக் கூட ஆசிரியர் வை.பாலசுந்தரம் என்பவர். ஆண்டு 1974. ஆனாலும் அது பெரிய அளவில் கவனம் பெறாமல் 2013 வாக்கில் தான் கவனம் பெறுகிறது.

கீழடியை முதலில் கண்டறிந்த ஆசிரியர் வை.பாலசுந்தரம்

2015ல் தான் மத்திய தொல்லியல் துறை ஆய்வை அனுமதிக்கிறது. முதல் கட்ட ஆய்விலேயே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிய வந்ததால் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கும் நகர்கிறார். இரண்டாம் கட்ட ஆய்வு பெரும் பிரமிப்பை தருகின்றன. ’’அடேங்கப்பா, இவ்வளவு பெரிய நாகரீக சமூகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளதா..?’’ என ஒவ்வொரு நாளும் கிடைக்கும் அரிய பொருட்கள் திகைப்பை தந்த வண்ணம் உள்ளன.

இந்த சூழலில் தான் இந்த அழகாய்வில் மிகத் திறமையாக இயங்கிய அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். அவர் இடத்திற்கு அனுபவமும், ஆர்வமும் இல்லாத ஸ்ரீராமன் என்பவர் வட இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார். அவர் ஏனோ, தானோவென்று அலட்சியம் காட்டிவிட்டு, மூன்றாவது கட்டத்திற்கு மேல் இதில் அகழாய்வு செய்வதற்கு ஏதுமில்லை என்ற கருத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறார். அப்படி பரிந்துரை செய்வதற்காகவே அவர் அங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டாரோ, என்னவோ என்ற சந்தேகம் வரலாற்று ஆய்வாளர்களிடையே ஏற்படுகிறது.  இன்னும் பற்பல கட்டங்கள் பல்லாண்டுகள் அகழாய்வு செய்ய வேண்டிய தேவையை கொண்டிருக்கிறது கீழடி என்பது எல்லோராலும் உணரப்படுகிறது.

அரிய அகழாய்வுப் பணியைத் தொடர முடியாமல் தடுக்கப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன்

இந்த நிலையில் தமிழக மற்றும் இந்திய அளவிலான உண்மையான வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், பாஜக அரசு இதை பொருட்படுத்தவேயில்லை.

இந்தச் சூழலில் கனிமொழி மதி என்ற இளம் பெண் வழக்கறிஞர் மதுரை உயர் நீதிமன்றத்தில் கீழடி ஆய்வை தொடர வலியுறுத்தி, ஒரு வழக்கை போடுகிறார். அதில் அவர் சொன்ன தகவல்களை சரி பார்க்க உயர்நீதிமன்ற நீதிபதிகளே கீழடி ஆய்வு களத்திற்கு நேரடி விசிட் செய்து பார்த்து, அங்குள்ள ஆய்வாளர்களிடம் பேசினர். அதன் பிறகு இதன் முக்கியவத்துவத்தை உணர்ந்து இந்த இடத்தில் மத்திய அரசு தொல்லியல் ஆய்வை முன்னெடுக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் நீதிபதிகள்!

அந்த காலகட்டத்தில் அதிமுக ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. நான்காவது கட்ட ஆய்வை துரிதமாக நடத்தி, அதில் கண்டெடுக்கப்பட்ட அழகழாய்வுகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக வெளியிட்டது அதிமுக அரசு. கொரோனா முடக்கத்தின் போது இந்தப் பணிகள் சிறிது தடைபட்டாலும், லேசான தளர்வுகள் தொடங்கிய உடனேயே ஆய்வையும் தொடங்கிவிட்டது அன்றைய தமிழக அராசாங்கம்.

சரி, எல்லாம் சரியாகத் தானே உள்ளது. இதில் என்ன பிரச்சினை. தற்போதும் கூட அகழாய்வுகள் தொடர்ந்து கொண்டு தானே உள்ளது. தற்போதைய பட்ஜெட்டிலும் தமிழக முதல்வர் அவர்கள் ரூ 5 கோடிகள் அகழாய்வுக்கு ஒதுக்கி  உத்திரவிட்டுள்ளதோடு, எந்தெந்த பகுதிகள் அகழாய்வு செய்யபட உள்ளன என்பதையும் கூட சொல்லி உள்ளாரே..என்று நமக்கு தோன்றுவது இயல்பு.

உண்மையில் இதில் என்ன பிரச்சினை என்றால், நமது கீழடியில் தொடர்ந்து அகழாய்வுகள் நடப்பதை மத்திய பாஜக அரசு முற்றிலும் விரும்பவில்லை. அதனால் தான் மிகச் சிறப்பாக செயல்பட்ட அமர்நாத் இராமகிருஷ்ணன் வேறு பணி இடத்திற்கு மாற்றப்பட்டதோடு, அலட்சியமுள்ள புதிய நபரை பொறுப்பேற வைத்ததும், அவர் இதில் இனி அய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என  இழுத்து மூட முயன்றதுமாகும்.

ஆனால், நல்வாய்ப்பாக இதில் நீதிமன்றம் தலையிட்டு தொடர்ந்து மாநில அரசு அகழாய்வை நடத்த மத்திய அரசுக்கு ஆணையிட்டது. ஆகவே தான் இந்த அகழாய்வு தொடர்கிறது. அதே சமயம் அமர்நாத் அவர்கள் செய்த இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை சுமார் பத்தாண்டுகள் ஆகவுள்ள நிலையிலும், மத்திய அரசு வெளியிடவே மறுக்கிறது. இந்தப் பிரச்சினையையும் மதுரை நீதிமன்றம் விசாரித்து, மத்திய அரசுக்கு பத்து மாதம் கெடு விதித்து அறிக்கை வெளியிட கேட்டுக் கொண்டது 2017 ஆம் ஆண்டு. இதனால், வேறு வழியின்றி அந்த அறிக்கையை எழுதி தரும்படி அமர்நாத் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மிகவும் சிரத்தையெடுத்து 982 பக்கத்திற்கு விரிவான அறிக்கை ஒன்றை எழுதி தந்துள்ளார். ஆயினும், அந்த அறிக்கையை பொதுவெளியில் வைக்க மறுத்து மத்திய அரசு சண்டித்தனம் செய்தது மத்திய பாஜக அரசு.

இதைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றம் மீண்டும் தலையிட்டு, அந்த 982 பக்க அறிக்கையை ஒன்பது மாதங்களில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என கடந்த பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு உத்திரவிட்டது. ஆயினும், 13 மாதங்கள் ஆகியும் இன்று வரை மத்திய அரசு அந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட முன்வரவில்லை. கீழடி என்பதும் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது. அதில் வெளிப்படும் பெருமை தமிழர்களுக்கு மாத்திரமன்று. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உரியது என எடுத்துக் கொள்ளும் பக்குவம் மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங்கி, கடந்த நான்காண்டுகள் ஒன்பது கட்டம் வரையிலான ஆய்வை தொடர்ந்து செய்து முடித்து, பத்தாம் கட்ட ஆய்வை செய்து வரும் தமிழக அரசும் இது வரை எந்த ஆய்வறிக்கையையும் அதிகாரபூர்வமாக பொதுவெளியில் வைக்கவில்லை.

இது குறித்து வரலாற்று துறை பேராசியரான சாந்தினிபீயிடம் உரையாடிய  போது, ’’கீழடி அகழாய்வுகள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டு அகழாய்வுக்கும் அதிகாரபூர்வ ஆய்வறிக்கை கிடைத்தால் தான் எங்களை போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் அதை உள்வாங்கிக் கொண்டு, மேற்கோள் காட்டியும்,மற்ற அகழாய்வுகளுடன் ஒப்பிட்டும் ஆய்வு கட்டுரைகள் எழுதவோ, கருத்தரங்கில் பேசவோ முடியும். வெறுமனே பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைக் கொண்டோ, முதல்வர் அல்லது அமைச்சர் அவர்களின் பேச்சைக் கொண்டோ முழுமையான புரிதலை பெற முடியாது. இந்த காலதாமதம் ஏனென்று புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றார்.

மத்திய பாஜக அரசு அகழாய்வு அறிக்கையை பிடிவாதமாக தரமறுத்து வருகிறது. அதே சமயம் மாநில திமுக அரசும் கடந்த நான்காண்டுகளாக  செய்யப்பட்ட எந்த அகழாய்வையும் முறையாக ஆவணப்படுத்தி, மகக்ள் மன்றத்தில் வைக்காமல் வெறும் வாய்ஜாலமாக இது திராவிட இனத்தின் தொன்மைக்கு பெருமை என்று ஜம்பம் பேசுகிறது. இந்த  திராவிட மாடல் ஜம்பப் பேச்சு தான் மத்திய பாஜக அரசை எரிச்சலடைய வைத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மத்திய அரசு எரிச்சல் அடைகிறது. கோபம் கொள்கிறது என்றால், அதனால் மாநில ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி உருவாகலாம் என்பதால், அதிகாரிகளும் அகழாய்வு அறிக்கையை வெளியிட ஆர்வம் காட்டாமல் அடக்கி வாசிக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. அதிமுக மாநில ஆட்சியில் இருந்த போது நான்காம் கட்ட ஆய்வை அவர்கள் இயல்பாக வெளியிட்டனர். திமுக வெளியில் ஜம்பம் அடிப்பதன் வாயிலாக மத்திய பாஜக அரசின் ஈகோவை உரசி பார்ப்பதால், மத்திய அரசு தரப்பில் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடக் கூடாது என நிர்பந்தம் தரப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் அகழாய்வுகளை அங்கிமிங்குமாக துண்டு துண்டாக செய்வதால் உரிய ‘ரிசல்ட்’ கிடைக்காது. ஏனென்றால், அகன்ற சாலைகளை கொண்ட ஒரு நகரத்தை அகழாய்வில் காண அதற்குரிய முக்கியத்துவம் தந்து அகலமாக ஆகழாய்வை நடத்த வேண்டும். ஆங்காங்கே தோண்டப்படும் குழிகள் போதுமானதல்ல. இதற்கு மொத்தமுள்ள 110 ஏக்கர் பரப்பளவை மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு தந்து கைவசப்படுத்த வேண்டும். இதை தருவதற்கு தமிழக மக்கள் தயக்கம் காட்டவில்லை என்பதற்கு இது வரை மக்கள் நிலம் தந்த சம்பவங்களே சாட்சியாகும். ஆனால், தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

எதற்கு ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும். இப்படியே வாய் ஜாலம் காட்டியே காலத்தை கடத்தி விடலாம் என திமுக அரசும் சாதுரியமாக சமாளிக்கிறது. ஆனால், இந்த அகழாய்வுகள் முறையாக நடத்தப்பட்டு, பொதுவெளியில் தெளிவான ஆய்வறிக்கையாக வைக்கப்பட்டால், உலக அரங்கில் பெரும் முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

சாவித்திரி கண்ணன்

 

Read Entire Article