ARTICLE AD BOX
*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கீழக்கரை : கீழக்கரையில் பாழடைந்து கிடக்கும் வள்ளல் சீதக்காதி வசந்த மண்டபத்தை புனரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சீதக்காதி என்ற வாக்கியத்தை அறியாதவர்கள் தமிழகத்தில் வெகு குறைவு. அப்படி வரலாற்று சிறப்பு மிக்க வள்ளல் சீதக்காதி, வாழ்ந்த கீழக்கரை கடற்கரையோரம் சரித்திரப் புகழ் வாய்ந்த கட்டிடம் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது.
நாடு ஆங்கிலேயேரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு அந்த இடத்தில் இருந்த கட்டிடத்தை அரசாங்கம் கீழக்கரை கஸ்டம்ஸ் அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்கள். அந்த இடத்தில் இருந்து கிழக்கு தெரு செல்லும் பாதை கஸ்டம்ஸ் தெரு என்றே பெயர் பெற்று விட்டது.
38 வருடங்கள் முன்பு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து கடலுக்குள் செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆபீசர்கள் கடலில் ரோந்து வர பைபர் படகுகள் அங்கு கட்டப்பட்டு இருக்கும். படிகளில் இறங்கி கரையோரமாக பழைய பாலத்திற்கு செல்லலாம். செல்லும் வழியில் அங்கிருந்த பாறைகளில் அலை மோதும் காட்சி கண்ணுக்கு இனிமை.
மாலை வேளையில் கடற்காற்றின் ரம்மியத்தை அனுபவிக்க பழைய குத்பா பள்ளி தெரு, செ.நெ.தெரு, கிழக்கு தெரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பெரியவர்கள் அலுவலகத்தின் திண்ணையிலும் சிறு பிள்ளைகள் படிக்கட்டில் ஏறி இறங்கியும் அலைகள் படிகளில் மோதும் போது வரும் நண்டுகளை பிடித்தும் மகிழ்வார்கள். தற்போது சுங்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கட்டிடம் சிதிலம் அடைந்து சின்னாபின்னமாக கிடக்கிறது.
குப்பைகள் நிறைந்தும் கீழக்கரையின் கழிவுநீர் வாய்க்கால் அந்த இடத்தில் கடலில் கலந்தும் நாற்றம் எடுக்கிறது. படிகள் பழுதடைந்து சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. கடல் அரிப்பினாலும் கழிவுநீர் வாய்க்கால் அந்த இடத்தில் சேர்ந்து இந்த இடத்திற்கும் கடற்கரை பழைய பாலத்திற்கும் இடையே நடக்க முடியாமல் உள்ளது.
பாண்டிய மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் கீழக்கரை துறைமுக பட்டணமாக செழித்திருந்தது. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த சிதைந்த கட்டிடம் அக்காலத்தில் சீதக்காதியின் வசந்த மண்டபம் என அழைக்கப்பட்டது.இங்கிருந்து தான் சரித்திர ஆய்வாளர்களால் போற்றப்படும் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் தனது ஏற்றுமதி இறக்குமதி கடல் வாணிபத்தை கண்காணித்தார்கள் என்பது வரலாறு.
பிரதானமாக அரேபியக் குதிரைகள் இறக்குமதியாகவும், முத்து, பவளம் மற்றும் கேரள வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதியாகவும் இருந்துள்ளது. குதிரைகள் வரும் நேரத்தில் மரைக்காயரின் உற்ற நண்பர் மாமன்னர் கிழவன் சேதுபதி அவ்வப்போது வருகை தருவார் என வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அதன் அருகில் சில ஆண்டுகளுக்கு முன் 30 ஆண்டுகளாக குப்பைகள் குவிந்து கிடந்தது. அதனை சமூக ஆர்வலர் சுத்தம் செய்தும், கீழக்கரை தலைமையில் இளைஞர்கள் தங்கள் சொந்த முயற்சியில் செலவில் சுத்தம் செய்தனர்.
அப்போது சுங்கத் துறையினருக்கான இடம். எனவே யாரும் உள்ளே நுழைய கூடாது என அறிவிப்பு வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பணியை தொடர முடியாமல் கைவிட்டனர். மீண்டும் அப்பகுதி குப்பையாகியது.
கடற்கரையோரம் சிதிலமடைந்த சீதக்காதி மாளிகையை சீர்படுத்தி நினைவிடமாக்க அரசு அறிவிக்க நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாழடைந்த கட்டிடத்தில் உள்ளே மது பாட்டில்களும் சிகரெட் துண்டுகள் நிரம்பி கிடக்கிறது. இப்படி சிறப்புமிக்க இவ்விடத்தை மீண்டும் சீர்படுத்தி இதனை வள்ளல் சீதக்காதி நினைவு மண்டபமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கீழக்கரையில் பாழடைந்து கிடக்கும் சீதக்காதி வசந்த மண்டபத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.