ARTICLE AD BOX
Published : 22 Jan 2025 05:54 PM
Last Updated : 22 Jan 2025 05:54 PM
கிடப்பில் போடப்பட்ட காரைக்குடி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம்!
<?php // } ?>ராமநாதபுரம்: கிடப்பில் போடப்பட்ட காரைக்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கி நிறைவேற்றுமா என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள பல முக்கிய நகரங்கள், புனித தலங்களுக்கு ரயில் போக்குவரத்து என்பது எட்டாக்கனியாக உள்ளது.
அதிலும் தொழில் வளம் இல்லாத பின்தங்கிய மாவட்டம் என பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதி மக்கள் இதுவரை ரயில் பாதையை கண்டதில்லை. அதனால், நீண்ட காலமாக கிழக்கு கடற்கரை வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள், வியாபாரிகள், எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதில் பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தொண்டி, தேவிபட்டினம், ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி வழியாக காரைக்குடி-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 2008-09-ம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்டு, 214.81 கி.மீ. தூர இந்த ரயில் பாதை திட்டம் ரூ.879 கோடியில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அறிவிப்போடு அடுத்து வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனால் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதி மக்கள், வியாபாரிகள், தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அதன் பின்னரும் இன்று வரை இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை துறைமுகங்களை கிழக்கு கடற்ரை வழியாக இணைக்க முடியும். தற்போது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கன்டெய்னர்கள், சரக்குகள், மதுரை, அருப்புக்கோட்டை மார்க்கமாக ரயில்களிலும், சாலை மார்க்கமாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைந்தால் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதோடு, புதிய தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. கிழக்குக் கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியில் தொடங்கி திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, மாமல்லபுரம் வழியாக சென்னை வரை செல்கிறது.
இவ்வழித்தடத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், நாங்குனேரி தொழில்நுட்பப் பூங்கா, உடன்குடி அனல் மின்நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்கத் திட்ட மையம் போன்றவை அமைந்துள்ளதால், இவைகளுக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.
தென்மாவட்ட ரயில்கள் தற்போது மதுரை, காரைக்குடி வழியாக சென்னைக்கும், பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் செல்கின்றன. கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைந்தால் நேரமும், கட்டணமும் குறையும். கடல் உணவு ஏற்றுமதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே முதற்கட்டமாக காரைக்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி மக்களும், வியாபாரிகளும், ரயில் பயணிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பி.ஜெகதீசன் கூறும்போது: கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கும்போது, இந்த சாலையால் அரசுக்கு பெரும் லாபம் இருக்காது எனக் கூறினர். ஆனால் இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கிழக்கு கடற்கரை பகுதி மக்களும், சரக்கு போக்குவரத்தும் இச்சாலையில் அதிகளவில் நடக்கிறது.
அதுபோல்தான் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தையும் ரயில்வே நிர்வாகம் செலவை பார்க்காமல், மக்கள் சேவையை பார்த்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் பயண நேரமும், எரிபொருள் செலவும் குறையும். ரயில் போக்குவரத்தால் இப்பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளும் குறையும். கடல் உணவு தொழில் மற்றும் தொழில் வளர்ச்சி அடையும்.
மதுரை வழியாக இரட்டை ரயில் வழித்தடங்கள் அமைந்தும், தென்மாவட்ட ரயில் போக்குவரத்து எப்போதும் நெரிசல் மிகுந்ததாகவே உள்ளது. அதனால் காரைக்குடி-தூத்துக்குடி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை