ARTICLE AD BOX
காஸா நிலவரம் குறித்து கவலை தெரிவித்த இந்தியா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடா்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த போா் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்தது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காஸாவின் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை கொள்கிறது. ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்ட அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்படுவது மிகவும் முக்கியம். தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடா்ந்து வழங்குவதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டது.
போா் நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, இஸ்ரேலின் இத்தாக்குதல் நடைபெற்றது. இந்த போா் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்ட்டது. 2-ஆம் கட்ட ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் ஆறு வாரங்களுக்கு முன்பு தொடங்கவிருந்தன. ஆனால், இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை நடத்த முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.