ARTICLE AD BOX
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இதில் காஸாவில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் காஸாவில் பாலஸ்தீனிய மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதனை ஒரு கடற்கரை சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என்ற திட்டத்தை முன்வைத்தார். இதுதொடர்பாக ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றுகூட கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. அதேநேரத்தில், ட்ரம்பின் திட்டத்துக்கு மாற்றாக எகிப்து ஒரு திட்டத்தை முன்வைத்தது. இந்தத் திட்டம் காஸாவில் உள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களை அகற்றாமல் 2030ஆம் ஆண்டுக்குள் காஸாவை மறுகட்டமைப்பு செய்வதற்கானது. அதாவது, பாலஸ்தீனிய மக்களை அகற்றாமல் அவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தருதல்,வேளாண் நிலங்களை மறுசீரமைத்தல், புதிய தொழிற்சாலைகளை தொடங்குதல் உள்ளிட்டவையே எகிப்தின் திட்டமாக உள்ளது. இதற்கு அரேபிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதற்கிடையே, காஸா குறித்த ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்மேற்கு ஸ்காட்லாந்தில் உள்ள அவருடைய டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்திற்குள் பாலஸ்தீன குழுவினர் சிலர் புகுந்து, அங்குள்ள புல்வெளி பகுதியில் 'காஸா விற்பனைக்கு இல்லை' எனப் பிரமாண்டமாக எழுதி வைத்துள்ளனர். மேலும், கோல்ஃப் மைதானம் முழுவதும் குழிகள் தோண்டப்பட்டு, ’ட்ரம்ப் காஸாவை தனது சொத்தாகக் கருத முயற்சித்தால், அவரது சொந்த சொத்து தங்களால் சூறையாடப்படும்’ என பாலஸ்தீன குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஸ்காட்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்கள் கோல்ஃப் விளையாட்டின் நான்கு முக்கிய சாம்பியன்ஷிப்களில், மிகப் பழமையான பிரிட்டிஷ் ஓபனை நடத்த சுழற்சி முறையில் நடத்தப்படும் 10 மைதானங்களில் டர்ன்பெர்ரியும் ஒன்றாகும். இருப்பினும், 2014ஆம் ஆண்டு ட்ரம்ப் இதை வாங்கி புதுப்பித்த பிறகு, பிரிட்டிஷ் ஓபன் எதையும் இங்கு நடத்தவில்லை.