ARTICLE AD BOX

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், இன்று முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாளும் விலகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஏனென்றால், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே போடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் நாதக மட்டுமின்றி திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் கலந்து கொள்ளவிருப்பதால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கு விளக்கம் அளிப்பேன் எனவும் காளியம்மாள் கூறியது இன்னும் இந்த தகவலை உறுதிப்படுத்துவற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
இதனையடுத்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில விஷயங்களை பேசினார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் காளியம்மாள் விலகல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் ” எனக்கு என்னவென்று தெரியவில்லை அவருடைய முடிவு குறித்து..ஆனால், அவருக்கு கட்சிக்குள் முழு சுதந்திரம் இருக்கிறது. எனவே, கட்சியில் இருந்து அவர் விலகுவதற்கும் சுதந்திரம் இருக்கிறது.
தங்கச்சியை முதலில் நாங்கள் தான் சமூக செயற்பாட்டாளர் பதவி கொடுத்தோம். அவரை அரசியலுக்கு அழைத்து வந்ததும் நாங்கள் தான். போகும்போதும் சரி திரும்பி வரும்போதும் சரி ரொம்ப நன்றி என்று தான் நாங்கள் சொல்வோம். போறதா இருந்தா போங்க..அது தான் எங்களுடைய கொள்கை. பருவகாலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று வருவது அனைவர்க்கும் தெரியும்.
அதேமாதிரி எங்களுடைய கட்சியில் இது கலையுதிர் காலம் வருவார்கள் போவார்கள். எனவே, என்னை பொறுத்தவரையில் தங்கை காளியம்மாள் விலகவேண்டும் என்றால் விலகட்டும்..இங்கு இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற எல்லா சுதந்திரமும் அவருக்கு இருக்கிறது” எனவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.