ARTICLE AD BOX
ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளது அந்த கட்சிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி எச்சரித்துள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- பொதுவாகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. அதை நான் ஆதரிப்பது இல்லை. இதற்கு விஜயும் விதி விலக்கு இல்லை. கடந்த காலங்களில் அரசியலுக்கு வந்த நடிகர்களின் செயல்பாடுகளை வைத்துதான் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். நடிகர்கள் அனைவரும் திரையில் காட்டிய பொய் முகத்தை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நடிகர் திரையில் நல்லவராக, வள்ளலாக நடிக்கிறார் என்றால், அதனை உண்மை என நம்பி அவரது ரசிகர்கள் இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என சொல்கின்றனர். இதுபோன்ற நிலையில் நடிகர்கள் ரசிகர்களின் அறியாமையை களைய வேண்டும். ஆனால் எம்ஜிஆர் தொடங்கி விஜய் வரை திரையில் காட்டிய பொய் முகத்தை வைத்தே அரசியலுக்கு வந்துள்ளனர். எம்ஜிஆர் ஒரு கட்சியில் நீண்ட காலம் பயணித்து, அந்த அரசியல் அனுபவத்தை வைத்து அவர் அரசியலுக்கு வந்தார். ஆனால் மற்ற நபர்கள் அப்படி பண்ண வில்லை. விஜயும் மக்களுக்காக எந்த இடத்திலும் குரல் கொடுக்கவில்லை, போராடவும் இல்லை. இனி வந்த பிறகு விஜய் என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டியுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் அரசியல்வாதியாக விஜயின் செயல்பாடு மெச்ச தகுந்ததாக இல்லை. சமீபத்தில் தவெக ஓராண்டு நிறைவை ஒட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தாளுக்கு வாழ்த்து கூறியதை தங்களின் சாதனையாக தெரிவித்துள்ளனர். இதனை பார்க்கும்போது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இதற்கு விஜய் கட்சியின் சார்பில் கருத்து தெரிவிக்கவில்லை. பின்னர் சீமான் பெரியாரை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசி வருகிறார். பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக்கொண்டிருக்கும் தவெக சார்பில் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கேட்டால் நாங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என்கிறார்கள். இது தனிமனித தாக்குதல் அல்ல. இதேபோல் விஜய் குறித்து சீமான் விமர்சித்தால் அதறகு தவெக பதில் அளிக்காமல் இருக்குமா?. போன முறை பட்ஜெட்டிற்கு அறிக்கை விடாதால் இந்த முறை அறிக்கை விட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் விசிகவுக்கு அதிகாரத்தில் பங்கு என்று சொன்னது நல்ல அறிவிப்பு.
தவெகவுக்கு ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் வருகையால் நன்மை வருகையால் பெரிய நன்மை நடக்கும் என்று தோன்றவில்லை. ஆதவ் அர்ஜுனாவில் நன்மை நடக்கும் என விஜய் நினைக்கிறார். ஆனால் அது எதர்த்தத்தில் சாத்தியமா? என்று தெரியவில்லை. மற்றொரு புறம் பார்த்தால் ஆதவ் அர்ஜுனாவின் வருகை என்பது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் விஷயமாகும். இத்தனை நாளாக விஜய்க்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது புஸ்ஸீ ஆனந்துதான். அதற்கு பிரதிபலனாக தான் பொதுச்செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. இப்போது திடீரென இன்னொருத்தரை கட்சிக்குள் கொண்டுவந்து பொதுச்செயலாளர் என பதவி கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட புஸ்ஸீ ஆனந்துக்கு நிகரான இடத்தை ஆதவ் அரஜுனாவுக்கு கொடுத்துள்ளது. இன்று பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கும். தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனத்திற்கு பின்னர் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆதவ் அர்ஜுனா பக்கம் செல்வார்கள். ஆதவ் அர்ஜுனாவின் பண பலம் என்பது ஒரு கட்டத்தில் புஸ்ஸீ ஆனந்தை விழுங்கி ஏப்பம் விடுவதற்கு வாய்ப்புள்ளது. மற்றொருவர் நிர்மல்குமார் ஆவார். ஆர்எஸ்எஸ்காரரான நிர்மல்குமார், அதிமுக வழியாக தவெகவுக்கு வந்துள்ளார். இது மிகவும் தவறானது. இதற்கான பலனை விஜய் விரைவில் அனுபவிப்பார்.
ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளராக பல்வேறு கட்சிகளுக்கு வேலை பார்க்கும்போது விமர்சனம் எழாது. ஆனால் ஒரு கட்சியில் சேர்ந்து பொறுப்பில் இருக்கும்போது உங்களது ஆதி அந்தம் எல்லாம் தோண்டப்படும். அப்படி ஆதவ் அர்ஜுனா யார் என்றால் லாட்டரி மார்ட்டினின் மருமகன். இன்றைக்கு அவருக்கு கிடைத்துள்ள மரியாதைக்கு காரணம் அவரிடம் உள்ள பணமும், மார்ட்டினின் மருமகன் என்கிற விசிட்டிங் கார்டுதான். ஆதவ் அர்ஜுன் உள்ளே வந்த உடன் லாட்டரி டிக்கெட்டும் கள்ள டிக்கெட்டும் கூட்டணி அமைத்துவிட்டார்கள் என மீம்ஸ் வைரலாகிறது. விஜய் நடிகராக இருக்கும்போது முதல் நாளில் கள்ள டிக்கெட் விற்பனை நடைபெறும். இதற்குள்ளாக ஒரு அழுத்தமான உண்மை உள்ளது. அதேவேளையில் ஆதவ் அர்ஜுனாவின் அனுபவத்தை கொண்டு தேர்தல் நேரத்தில் வியூகம் அமைப்பதில் விஜய்க்கு பலன் கொடுக்கும். விஜய் கார்ப்பரேட் அரசியலை முன்னெடுத்து வருகிறார் என பத்திரிகையாளர் அய்யநாதன் சொல்வதில் தவறு இல்லை.
ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றது என்பது அரசியல்தான். நாகரிக அரசியல் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா என்பது விஜய், திருமா, ஆதவ் இணைந்து நடத்தும் ஒரு நாடாகம், திமுகவை ஏற்றுவதற்காக இதனை செய்தார்கள் என்று சொன்னேன். விசிக, திமுக கூட்டணியை விட்டு வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததால், அவர்கள் திமுகவுக்கு செல்லவில்லை. இப்போது பாஜக விலகிவிட்டதால் அவர்கள் அதிமுக கூட்டணிக்கு செல்லலாம். ஆதவ் அர்ஜுனா திமுக மீது ஏதோ ஒரு விஷயத்தில் கோபத்தில் உள்ளார். அதனால் திமுக கூட்டணியில் இருந்து விசிகவை விலக்கி, விஜய் கட்சிக்கு கொண்டுசெல்ல வாய்ப்பு உள்ளது. 2026 தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற காட்சிகளை பார்க்க முடியும்,
தவெகவில் பதவி கிடைக்காதவர்கள் பேட்டி அளிப்பதை பெரிது படுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் முக்கியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கக்கூடா என்ற திட்டத்துடன், வேறு சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுவது ஏற்க முடியாதது. இந்த விஷயத்தை விஜய் கவனமாக இருக்க வேண்டும். மாவட்ட செயலாளருக்கு என்று அரசியல் கட்சியில் சில தகுதிகள் உள்ளன.ஆனால் பெண்கள், மாற்றுத்திறனாளிகளை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளது நல்ல விஷயம்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.