காரை மறித்து மாணவிகள் கோரிக்கை அமைச்சரிடம் பேசி உடனடி ‘ஆக்‌ஷன்’

12 hours ago
ARTICLE AD BOX

*கொடைக்கானலில் எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் அதிரடி

கொடைக்கானல் :கொடைக்கானலில் காரை வழிமறித்து கல்லூரி மாணவிகள் வைத்த கோரிக்கைக்கு, அமைச்சருடன் உடனே பேசி நடவடிக்கை எடுத்தார் பழநி எம்எல்ஏ. இதற்காக, எம்எல்ஏவுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘கொடைக்கானலில் உள்ள அனுமதியற்ற கட்டடங்கள் வரைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொடைக்கானலுக்கு துணை முதல்வர் வந்து புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார். மேல்மலை பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளன. சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்படும்’’ என்றார்.

விழா முடிந்த பின்னர், வில்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது, எம்எல்ஏவின் வாகனத்தை கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வழிமறித்து நிறுத்தினர்.

இதையடுத்து வாகனத்தை விட்டு இறங்கிய ஐ.பி.செந்தில்குமார் அவர்களது கோரிக்கையை கேட்டார். கல்லூரி மாணவிகள், ‘எங்களுக்கு விடுதி வசதி செய்து தரவேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். உடனடியாக சாலையில் நின்றபடியே உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனிடம், எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘மாணவிகள் விடுதி வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, என்னை வழிமறித்து உள்ளனர். நீங்கள் உடனடியாக மாணவிகளுக்கு விடுதி வசதி செய்து தரவேண்டும், இல்லாவிட்டால் மாணவிகள் எனக்கு வழி விடமாட்டார்கள்’’ என அமைச்சரிடம் பேசினார்.

அதற்கு அமைச்சர், ‘‘உடனடியாக ஆவண செய்யப்படும். இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்ததுடன், பேராசிரியை மற்றும் மாணவிகளிடமும் பேசினார். மாணவிகளுக்கு உடனடியாக புதிய தங்கும் விடுதி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

சாலையை மறித்து கல்லூரி மாணவிகள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரை மாணவிகளும், பேராசிரியர்களும் மனதார பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

The post காரை மறித்து மாணவிகள் கோரிக்கை அமைச்சரிடம் பேசி உடனடி ‘ஆக்‌ஷன்’ appeared first on Dinakaran.

Read Entire Article