ARTICLE AD BOX
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்டேகா மாவட்டத்தின் அவ்கா-கர்ஸா வனப்பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வலது காலில் காயமடைந்த நிலையில் யானை ஒன்று சுற்றி வருவதாக கிராமவாசிகள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் 5 வயதுடைய அந்த யானைக்கு வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் சிகிச்சையளித்து வந்துள்ளனர். மேலும், அந்த யானையை கண்கானிக்க 2 பேர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காயங்கள் குணமாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!
இந்நிலையில், கடந்த மார்ச் 4 அன்று வனத்துறை அதிகாரிகள் அந்த யானைக்கு சிகிச்சையளித்து விட்டு திரும்பிய நிலையில், நேற்று (மார்ச் 5) உயிரிழந்த நிலையில் அந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, யானையை யாரோ பிடிக்க முயன்றதினால்தான் அதற்கு காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்த முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.